Home /News /sports /

இதே தினத்தில் அன்று- இந்தியா 414 ரன்கள், இலங்கை 411- தோனி கேப்டன்சியில் அபார வெற்றி

இதே தினத்தில் அன்று- இந்தியா 414 ரன்கள், இலங்கை 411- தோனி கேப்டன்சியில் அபார வெற்றி

வெற்றிக்களிப்பில் தோனி படை.

வெற்றிக்களிப்பில் தோனி படை.

ஆட்டம் முடிந்து கேப்டன் கூல் தோனி  கூலாவது மண்ணாவது என்று நிதானத்தை இழந்த தருணத்தை விவரிக்கும் போது, “400 ரன்களை அடித்து ஏறக்குறைய தோற்கும் நிலை என்றால் யாரும் கூலாக இருக்க முடியாது” என்றார்.

    டிசம்பர் 15ம் தேதி, 2009 -ம் ஆண்டில் ராஜ்கோட்டில் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி காவியத்தன்மையுடன் ஒப்பிட வேண்டியதாகும். இந்தியா 414 ரன்களைக் குவிக்க கிட்டத்தட்ட விரட்டி நெருங்கி வந்த இலங்கை அணி 411 ரன்களைக் குவித்து 3 ரன்களில் தோல்வி கண்டது இலங்கை.

    இந்திய அணிக்கு எம்.எஸ்.தோனி கேப்டன், இலங்கை அணிக்கு சங்கக்காரா கேப்டன், இந்திய அணியில் சேவாக், சச்சின், தோனி, ரெய்னா, கம்பீர், ஹர்பஜன் சிங், விராட் கோலி, ஜடேஜா, பிரவீண் குமார், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா இருந்தனர்.

    தோனி-கம்பீர்


    இலங்கை அணியில் தரங்கா, திலக ரத்னே தில்ஷன், சங்கக்காரா, சனத் ஜெயசூரியா, மகேலா ஜெயவர்தனே, திலின கண்டாம்பி, மேத்யூஸ், சமரவீரா, நுவான் குலசேகரா, வெலிகேதரா ஆகியோர் ஆடினர்.

    பிட்ச் அடிதடி மட்டைப் பிட்ச் என்று தெரிந்த சங்கக்காரா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சிம்ம சொப்பன தொடக்க வீரர்கள், சேவாக், சச்சின் இறங்கினர். இலங்கை என்றாலே போட்டுப் பிளக்க வேண்டியதுதான் என்ற மன நிலை கொண்டவர் சேவாக் அன்றும் பின்னி எடுத்தார், அவரும் சச்சினும் சேர்ந்து 19.3 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 153 ரன்களைச் சேர்த்தனர்.

    சச்சின் டெண்டுல்கர் 63 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 69 ரன்களில் பெர்ன்னானடோ பந்தில் பவுல்டு ஆனார். கேப்டன் தோனி தன்னை 3ம் நிலைக்கு உயர்த்தி களமிறங்கினார், ஏனெனில் பிட்ச் விளாசல் பிட்ச் என்று அவருக்குத் தெரிந்தது. சேவாக் ஒருபுறம், தோனி ஒருபுறம் இலங்கை பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். இருவரும் சேர்ந்து 96 பந்துகளில் 156 ரன்களை விளாசித்தள்ளினர். சேவாக் 66 பந்துகளில் 12 பவுண்டரி 5 சிக்சர்களுடன் சதம் காண தோனி 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 34 பந்துகளில் அரைசதம் எடுத்தார்,



    சேவாகும் தோனியும் சேர்ந்து ஸ்கோரை 35வது ஓவரிலேயே 309 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், சேவாக் அப்போது 102 பந்துகளில் 17 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி 53 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசினார். இந்த மேட்சில் வேடிக்கை என்னவெனில் தோனி, ரெய்னா, கம்பீர், ஹர்பஜன் ஆகியோருக்குப் பிறகு விராட் கோலி இறக்கப்பட்டார். கோலி 27 ரன்களையும் ஜடேஜா 30 ரன்களையும் சிறு அதிரடி இன்னிங்ஸில் குவிக்க இந்திய அணி 414/7 என்று இன்னிங்ஸை முடித்தது. இலங்கை அணியில் சனத் ஜெயசூரியா 7 ஓவர் 76 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    தரங்கா, தில்ஷான் விளாசல்:

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் தரங்கா (67), திலகரத்னே தில்ஷான் (160) தொடக்க கூட்டணியாக 24 ஓவர்களில் 188 என்று இந்திய அணிக்கு சவால் அளித்தனர், ஜாகீர்கான், ஆஷிஷ் நெஹ்ரா என்று அனைவருக்கும் சாத்துப்படி நடந்த நாள் அது. எப்படி இங்கு சேவாக், தோனி கூட்டணி 96 பந்தில் 153 விளாசியதோ அங்கு தில்ஷான், கேப்டன் சங்கக்காரா கூட்டணி 128 ரன்களை 12 ஓவர்களில் குவித்து 10-ம் வாய்ப்பாடு நடத்தினர்.



    ஆனால் சனத் ஜெயசூரியா-5, ஜெயவர்தனே 3 என்று வெளியேற, சங்கக்காரா 43 பந்துகளில் 10 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால் தில்ஷான் விடவில்லை அவர் 124 பந்துகளில் 20 பவுண்டரி 3 சிக்சர்கள் உடன் 160 ரன்கள் விளாசி 40வது ஓவரில் வெளியேறிய போது இலங்கை 339/4 என்று இந்திய இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று விடுவார்கள் போல்தான் இருந்தது. மேத்யூஸ் (38), கண்டாம்பி (24) சேர்ந்து ஸ்கோரை 45வது ஓவரில் 383/5 என்று எடுத்துச் சென்றனர். 5 ஓவர்களி தேவை 32 ரன்கள்தான்.

    ஆனால் அதன் பிறகு நெஹ்ரா ஒரு ஓவரில் 5 ரன்களையும் ஜாகீர் கான் தன் ஓவரில் 5 ரன்களையும் விட்டுக் கொடுத்து கட்டுப்படுத்த 48வது ஓவரில் 400/5 என்று இருந்தது, இதுவும் இலங்கைக்கு வெற்றி பெற ஏதுவான நிலைதான். அப்போதுதான் ஜாகீர் கான் தன் வேலையைக் காட்டினார் 49வது ஓவரில் அவர் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி ஓவரில் 11 ரன்கள் இலங்கைக்குத் தேவை. நெஹ்ரா பிரமாதமாக வீசி மேத்யூஸை வீழ்த்த அந்த ஓவரில் 7 ரன்களே வர இலங்கை 411/7 என்று முடிந்தது. தோனி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

    ஆட்டம் முடிந்து கேப்டன் கூல் தோனி  கூலாவது மண்ணாவது என்று நிதானத்தை இழந்த தருணத்தை விவரிக்கும் போது, “400 ரன்களை அடித்து ஏறக்குறைய தோற்கும் நிலை என்றால் யாரும் கூலாக இருக்க முடியாது” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs srilanka, MS Dhoni, Sachin tendulkar, Virender sehwag

    அடுத்த செய்தி