• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மறக்க முடியுமா?- இன்றைய தினத்தில் அன்று... சர்வதேச கிரிக்கெட்டில் ‘லெஜண்ட்’ தோனி அடியெடுத்து வைத்த நாள்

மறக்க முடியுமா?- இன்றைய தினத்தில் அன்று... சர்வதேச கிரிக்கெட்டில் ‘லெஜண்ட்’ தோனி அடியெடுத்து வைத்த நாள்

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

2004ம் ஆண்டு இதே தினம் நீள முடியுடன் தன் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ‘தல’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி காலடி எடுத்து வைத்தார்.

  • Share this:
2004ம் ஆண்டு இதே தினம் நீள முடியுடன் தன் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ‘தல’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி காலடி எடுத்து வைத்தார்.

ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டி20 என்று பல வடிவங்களிலும் தன் முத்திரையைப் பதித்த உலகின் கிரேட் பினிஷருக்கு இன்றைய நாளில் அன்றைய தினம் சரியாக அமையவில்லை. ஆம்! சிட்டகாங்கில் தோனி வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கி ரன் எடுக்காமலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஆனால் அதன் பிறகு தோனி ஆடியதெல்லாம் இன்று வரலாறாகியுள்ளது. அதுவும் குறிப்பாக சவுரவ் கங்குலி தான் இறங்க வேண்டிய 3ம் நிலையில் எம்.எஸ்.தோனியை இறக்கி விட இலங்கை அணிக்கு எதிராக தோனி தன் கைவசம் இருந்த சரவெடி ஷாட்களையெல்லாம் எடுத்து விட இலங்கை பவுலிங் கலகலத்துப் போனது அன்று அவர் எடுத்த ஸ்கோர் 183, இதுதான் தோனியின் அதிகபட்ச ஒருநாள் சர்வதேச ஸ்கோராகவும் மிளிர்ந்து வருகிறது.

2007ம் ஆண்டு உலகக்கோப்பையில் வங்கதேசத்திடம் தோற்று ராகுல் திராவிட் கேப்டன்சியில் முதல் சுற்றிலேயே வெளியேறியதை ரசிகர்கள் மறக்கவே விரும்புவார்கள் அந்தத் தொடரிலும் தோனி இருந்தார், ஒரு மூலையில். விக்கெட் கீப்பிங்கை மட்டும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தோனி


அந்த உலகக்கோப்பை தோல்வி பெரிய விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்ப 2007ம் ஆண்டு தொடக்க டி20 உலகக்கோப்பையில் எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் அருமையாக அணியை வழிநடத்தி அணிக்குள் இளமையைப் புகுத்தி கோப்பையை வென்ற பிறகு கூறிய போது இறுதிப்போட்டியில் தோற்றிருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டேன் என்றார். அப்போது முதல் கேப்டன் கூல் என்றே செல்லமாக அழைக்கப்பட்டார்.

அப்போது தொடங்கிய அவரது கேப்டன்சி வாழ்க்கை இந்தியா பெற்றெடுத்த மிகச்சிறந்த ஒரு கிரிக்கெட் வீரராகவும் கேப்டனாகவும் அவர் உயரே சென்றதை விவரிப்பதாக அமையும்.

கபில்தேவுக்குப் பிறகு பின் வரிசையில் ஒரு அச்சுறுத்தும் வீரராகவும், பினிஷராகவும், எதிரணியினருக்கு கிலி ஏற்படுத்தும் ஒரு கேப்டனாகவும் அவர் திகழ்ந்தார். 2011 உலகக்கோப்பையை சொல்லி வென்றார். 2013-ல் சற்றும் எதிர்பாரா வகையில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி என்ற மினி உலகக்கோப்பையையும் அவர் தலைமையில் இந்தியா வென்றது.

2017-ல் தன் கேப்டன்சி பொறுப்பை உதறினார், விராட் கோலி கேப்டனானார், 2020-ல் ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வு அறிவித்தார். அவர் முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனார். கடைசியாக 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதியிலும் ரன் அவுட் ஆனார். ரசிகர்கள் இருதயம் வெடித்தது.

ஆனால் தோனியிடம் கடைசி வரை மறக்க முடியாதது அவரது அந்த ‘பிளாஷ் ஸ்டம்பிங்’. பேட்ஸ்மென் கால் அரை இஞ்ச் வெளியே இருந்தாலும் ஒரு கிளவ் பைல்களைத் தட்டி விடும் அந்த கிளவ்வுக்குச் சொந்தக் காரர் தோனிதான்.

ஒரு சிறு ஊரிலிருந்து வந்த தோனி முதலில் கால்பந்தில்தான் அதிக நாட்டமாக இருந்தார். சாதாரண பின்னணியிலிருந்து டிக்கெட் கலெக்டராக பணியாற்றி டெல்லி, மும்பை ஆதிக்கத்தைத் தகர்த்தெறிந்து ஜார்கண்டிலிருந்து வந்த ஒரே சூப்பர் ஸ்டார் ஆனார் தோனி.

சாதனைத் துளிகள்:

10,773: ஒருநாள் கிரிகெட்டில் அதிகபட்ச ரன்களைக் குவித்த 11வது வீரர்

50.57: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் 8 சராசரிகளுள் ஒன்று.

14 பேட்ஸ்மென்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைத் தாண்டியும் குவித்துள்ளனர். அதில் இவர் ஒருவர்தான் டாப் ஆர்டரில் இறங்காமல் பின்னால் களமிறங்கி 10,000 சாதித்த ஒரே வீரர்.

தோனி வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை 16 ஆண்டுகள் ஓடி விட்டன. இடைப்பட்ட காலத்தில் எத்தனை பினிஷிங்குகள், எத்தனை வெற்றிகள், எத்தனை கோப்பைகள், எத்தனை ஹெலிகாப்டர் ஷாட்கள், எத்தனை ஸ்டம்பிங்குகள், எத்தனை சிக்சர்கள், விக்கெட்டுகளுக்கு இடையே எத்தனை கிடுகிடு ஓட்டங்கள்... எத்தனை வேகமான கைகள், எத்தனை வேகமான கால்கள்,  எத்தனை வேகமான மட்டைச் சுழற்றல்கள், எத்தனை பேட்டிகள், எத்தனை கருத்துகள், எத்தனைப் பாராட்டுக்கள், அனைத்தையும் தாண்டி எத்தனை ரசிகர்கள்... பலகோடி இதயங்களை வென்றெடுத்த ‘தல’ தோனியை பற்றி எத்தனை நினைவுகள்.. தோனியை மறக்கத்தான் முடியுமோ ?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: