• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 1987-உலகக்கோப்பை இதே நாள்: கபில் தேவின் பரந்த உள்ளத்தினால் 1 ரன்னில் வென்ற ஆஸ்திரேலியா- நம்ம சென்னையில்தான்

1987-உலகக்கோப்பை இதே நாள்: கபில் தேவின் பரந்த உள்ளத்தினால் 1 ரன்னில் வென்ற ஆஸ்திரேலியா- நம்ம சென்னையில்தான்

கபில் தேவின் பரந்த உள்ளம் 1987 உலகக்கோப்பை சென்னை.

கபில் தேவின் பரந்த உள்ளம் 1987 உலகக்கோப்பை சென்னை.

இன்று ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட், ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப் என்றாலே கெட்ட வார்த்தையாகிப் போகும் அளவுக்கு கிரிக்கெட்டில் மனநிலை கெட்டுப் போய் விட்டது, ஒரு காலத்தில் கபில்தேவ் நியாயமாக நடந்து கொண்டதோடு, பெரிய மனதுடன் பெருந்தன்மை காட்டியதோடு ஒரு உயர்தர ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பை வெளிப்படுத்தினார், அதனால் 1 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது, அதுவும் உலகக்கோப்பை போட்டியில் அப்போதைய ரசிகர்கள் அதைப் பாராட்டினர்.

  • Share this:
    ஆம்! அக்டோபர் 9, 1987 இதே தினம் தான். 1987 உலகக்கோப்பை போட்டி, சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஆடுகிறது, ரசிகர்கள் வெள்ளத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா ஒரு ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது, காரணம், கபில்தேவின் ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட், பெருந்தன்மை, மகா உள்ளம், பெரிய மனது, பரந்த இதயம் என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.

    டாஸ் வென்ற கபில்தேவ் ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஜெஃப் மார்ஷ், இப்போதைய மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷின் தந்தை செஞ்சுரி அடித்தார். டேவிட் பூன் 49 ரன்களில் ரவிசாஸ்திரியிடம் எல்.பி.ஆக முதல் விக்கெட்டுக்காக 110 ரன்களைச் சேர்த்தனர். டீன் ஜோன்ஸ் பிரமாதமான நம்பர் 3 பேட்ஸ்மேன் , அவர் ஜெஃப் மார்ஷுடன் இணைந்தார்.

    அப்போதுதான் டீன் ஜோன்ஸ் இந்திய இடது கை ஸ்பின்னர் மனீந்தர் சிங் வீசிய பந்தை லாங் ஆனில் தூக்கி அடித்தார். சாஸ்திரி அங்கு கேட்சை விட்டார் அது நான்கு ரன்கள் என்று நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் பவுண்டரியில் இருக்கும் வீரர் சொல்வதுதான் நடுவருக்கு சாட்சி. சாஸ்திரி அதை பவுண்டரி என்றார். ஆனால் ஜோன்ஸ் அந்த பந்து ரவிசாஸ்திரி கையில் பட்டு எல்லைக்கோட்டி தாண்டி சிக்ஸ் என்ரு நம்பினார். வாதிட்டார்.

    விக்கெட் கீப்பர் கிரன் மோரும் ஒரு பைட்டர், அவரும் பவுண்டரிதான் என்றார். அது பவுண்டரி என்று தான் தீர்ப்பானது, இந்நிலையில் 39 ரன்களில் மணீந்தரிடம் ஆட்டமிழந்தார் ஜோன்ஸ். ஆஸ்திரேலிய மீதி பேட்டிங் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை இந்தியா அவர்களை 268/6 என்று மட்டுப்படுத்தியது. ஆனால் இன்னிங்ஸ் இடைவேளையில் ஆஸ்திரேலிய மேனேஜர் அந்த பவுண்டரி விஷயத்தைக் கையில் எடுத்து நடுவர் தவறு, அது சிக்ஸ்தான் என்று வாதிட்டார். நடுவர்கள் இந்திய கேப்டன் கபில்தேவிடம் ஆலோசனை செய்தனர், கபில்தேவ் மிகப்பெருந்தன்மையாக அதை சிக்ஸ் என்று ஒப்புக் கொண்டு 2 ரன்களை ஆஸ்திரேலிய இலக்கில் கூடுதலாகச் சேர்க்க ஒப்புக் கொண்டார், இது மிகப்பெரிய விஷயம். அஸ்வினாக இருந்தால் ஓவென்று அழுதிருப்பார். இதனால் 268/6 என்ற ஆஸ்திரேலிய ஸ்கோர் 2 ரனக்ள் கூடுதலினால் 270 ஆக மாற்றப்பட்டது.

    இந்திய சேசிங்கில் பெரிய கவர்ச்சி அப்போதெல்லாம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இவரும் கவாஸ்கரும் மைதானம் அதிர இறங்கினர். ஸ்ரீகாந்த் கவாஸ்கர் சிலபல ஷாட்களை ஆடினர், கவாஸ்கர் 37 ரன்களில் வெளியேறினார், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை கண்டால் அப்போது ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனம். ஸ்ரீகாந்த் வலுவாக சென்று கொண்டிருந்தார் 70 ரன்களில் அபாயகரமாக ஆடிய போது ஸ்டீவ் வாஹ் அவரை எல்.பி.செய்து வெளியேற்றினார். வெங்சர்க்காரை 29 ரன்களில் மெக்டர்மாட் வீழ்த்தினார்.

    நவ்ஜோத் சித்து சென்னை ரசிகர்களை அலற விட்டார், 4 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார். சித்து மெக்டர்மாட் பந்தில் பவுல்டு ஆன போது இந்தியா 207/3 என்று வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் அசாருதீன், கபில்தேவ், சாஸ்திரி, கிரன் மோர் அடுத்தடுத்து வெளியேற இந்தியா 265/9 என்று ஆனது. 49.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆகி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, அந்த சிக்சரை மட்டும் கபில்தேவ் மறுத்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். ஒரு ரன்னில் தோல்வி தழுவியது, ஆனால் யாரும் வருந்தவில்லை, கபில்தேவின் அந்தத் தருணம் மிகப்பெரிய தருணம். இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய இடம் இதுதான். இந்த நாள் இதனால்தான் மறக்க முடியாத நாள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: