ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மறக்க முடியுமா?-இந்திய அணியை துச்சமாக எடைபோட்ட இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறிய நாள்

மறக்க முடியுமா?-இந்திய அணியை துச்சமாக எடைபோட்ட இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறிய நாள்

1983 இந்திய அணி.

1983 இந்திய அணி.

1983 உலகக்கோப்பை என்பது பழம்பெரும் கதையாய், கதையாடலாய், இதிகாசமாய், காவியமாய் இந்திய மக்கள் மனதில் குடிகொண்டதால்தான் 83 என்ற திரைப்படம் வெற்றி பெற்றது. இன்று அதாவது ஜூன் 22ம் தேதி உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை துச்சமாக மதித்த இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறிய மறக்க முடியாத நாள்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  1983 உலகக்கோப்பை என்பது பழம்பெரும் கதையாய், கதையாடலாய், இதிகாசமாய், காவியமாய் இந்திய மக்கள் மனதில் குடிகொண்டதால்தான் 83 என்ற திரைப்படம் வெற்றி பெற்றது. இன்று அதாவது ஜூன் 22ம் தேதி உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை துச்சமாக மதித்த இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறிய மறக்க முடியாத நாள்.

  இந்தியா அரையிறுதி வரை வந்ததே அதிர்ஷ்ட என்றெல்லாம் இங்கிலாந்து ஊடகங்கள் கேலி பேசின, இதோடு இந்தியா கதை முடிந்தது என்று எழுதினர். ஆனால் இங்கிலாந்துக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்ததை அவர்கள் உணரவில்லை.

  ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் அன்று இங்கிலாந்து கேப்டன், டெர்ரர் வேகப்பந்து வீச்சுப் பவுலர் பாப் வில்லிஸ் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். அப்போது இங்கிலாந்தில் ஜெஃப் பாய்க்காட்டை விடவும் மகா அறுவையான தொடக்க வீரர் ஒருவர் இருந்தார்,அவர் பெயர் கிறிஸ் டாவரே. இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கிரேம் ஃபவுலர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

  ஃபவுலர் 59 பந்துகளில் 33 ரன்களையும் கிறிஸ் டாவரே 51 பந்துகளில் 32 ரன்களையும் எடுத்தனர், அப்போதெல்லாம் 60 ஓவர் என்பதால் பின்னால் இயன் போத்தம் வேறு இருந்ததால் இது ஒரு நல்ல தொடக்கமே, ஆனால் கபில்தேவ் ராஜர் பின்னி, மதன்லால் டைட்டாக வீசினர். இந்த இருவரையும் ராஜர் பின்னி கிளீன் பவுல்டு செய்தார்.

  பிறகு மொஹீந்தர் அமர்நாத் தான் ஆடி ஆடி வந்து வீசும் பவுலிங்கைப் போட்டார், ஆனால் அமர்நாத் ஒரு நல்ல கட்டர் பவுலர். கட்டர்களை வீசி பெரிய பெரிய வீரர்களையெல்லாம் குச்சியை கழற்றியிருக்கிறார், ஒருமுறை ஆஸ்திரேலியாவின் சிறந்த தொடக்க வீரர் இயன் ரெட்பாத், ஆலன் டர்னர் இருவரையும் இப்படி ஆடி ஆடிவந்து வீசி பவுல்டு ஆக்கி ஆஸ்திரேலியாவுக்கே டெஸ்ட் போட்டியில் அதிர்ச்சியளித்தார் மொஹீந்தர் அமர்நாத்.

  அந்த மொஹீந்தர் அமர்நாத் பந்து வீச வந்தார், இன்னொரு முனையில் கீர்த்தி ஆசாத் இருவரும் இங்கிலாந்தின் மிடில் ஆர்டருக்கு கிடுக்கிப் பிடி போட்டனர். டேவிட் கோவர் ஒரு அதிரடி வீரர், அவர் விக்கெட்டை அமர்நாத் வீழ்த்தினார், சையத் கிர்மானி கேட்ச். ஆலன் லாம்ப் மிக பிரமாதமான வீரர் ரன் அவுட் ஆனார், மைக் கேட்டிங் 18 ரன்களில் அமர்நாத்திடம் பவுல்டு ஆனார். இயன் போத்தமை கீர்த்தி ஆசாத் வீழ்த்தினார், இந்தப் பந்து கணுக்கால் உயரம்தான் வந்தது என்று அப்போது பெரிய புகார் எழுந்தது. கபில்தேவ் டெய்ல் எண்டர்களை காலி செய்ய இங்கிலாந்து 213 ரன்கள் எடுத்தது.

  இந்தியா பேட்டிங் இறங்கிய போது கிரிஸ் ஸ்ரீகாந்த் சில பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுக்க கவாஸ்கர் 25 ரன்களில் வெளியேறினார். ஆனால் அதன் பிறகு அமர்நாத், யாஷ்பால் சர்மா ஜோடி சேர்ந்து 92 ரன்கள் சேர்த்தனர், அமர்நாத் 92 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தாலும் மிக முக்கியமான இன்னிங்ஸ். யாஷ்பால் சர்மா 61 ரன்கள் எடுத்தார், அதுவும் பாப் வில்லிசை ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு ஸ்கொயர் லெக் மேல் அடித்த சிக்ஸ், ரிச்சர்ட்ஸ் ரகம் என்று அப்போது பேசப்பட்டது. 61 ரன்கள் எடுத்து யாஷ்பால் அவுட் ஆனார், ஆனால் ஒருமுறை யாஷ்பால் ரன் அவுட் ஆனார், அது ரீப்ளேயில் தெரிந்தது, ரிவியூவெல்லாம் கிடையாது, அப்போது யாஷ்பால் அவுட் ஆகியிருந்தால் இந்தியா தோற்றிருந்தாலும் தோற்றிருக்கும். இன்று யாஷ்பால் சர்மா நம்மிடையே இல்லை.

  ஆனால் அதன் பிறகு இறங்கினாரே பார்க்கலாம் சந்தீப் பாட்டீல், அப்போது இந்திய பேட்டிங்கின் சென்சேஷன் என்றால் சந்தீப் பாட்டீல் தான். 32 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார் இந்தியா வெற்றி பெற்றது, இதில் பாப் வில்லிஸை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார், இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி, இங்கிலாந்து ஊடகங்கள் புலம்பித் தீர்த்து விட்டன, இந்தியா உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறியது, பிறகு 25ம் தேதி இறுதியையும் வென்று உலகக்கோப்பையை வென்றது கபில்ஸ் டெவில்ஸ் அணி. இந்த நாளை மறக்க முடியாது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: ICC world cup, India Vs England