‘நாகின் டான்ஸ்’ வங்கதேசம் வெற்றி: முஷ்பிகுர், மஹமுதுல்லா மேட்ச் வின்னிங் கூட்டணி- இலங்கையை வீழ்த்தியது

ஆட்ட நாயகன் முஷ்பிகுர், மெஹதி ஹசன் மிராஸ்

வங்கதேச பவுலர் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் டாக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேச அணி இலங்கையை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 • Share this:
  இதன் மூலம் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது வங்கதேசம். இலங்கை வீரர் வைந்து ஹசரங்கா 64 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா அரைசதம் எடுக்க வங்கதேச அணி 257/6 என்று முடிந்தது, தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 224 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

  இலக்கை விரட்டும் போது வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் இலங்கையின் டாப் 6 வீரர்களில் 4 வீரர்களை வெளியேற்றி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை அணி 102/6 என்று தடுமாறியது. 28 ஓவர்கள் முடிந்து விட்டது. அப்போது இலங்கை அணிக்கு தெம்பு கொடுத்தார் ஹசரங்கா, இவரது அதிரடியில் வங்கதேச அணி நடுங்கிப்போனது.

  60 பந்துகளில் ஹசரங்கா 3 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 74 ரன்கள் விளாசினார். 44வது ஓவரில் இலங்கை 211/7 என்று இருந்தது. இசுரு உதனா (21) மற்றும் ஹசரங்கா இணைந்து 8-வது விக்கெட்டுக்காக 62 ரன்கள் சேர்த்தனர், ஆனால் இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழக்க 48.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை.

  முன்னதாக வங்கதேச இன்னிங்சில் முஷ்பிகுர் ரஹிம் 87 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார். கேப்டன் தமிம் இக்பால் (52), மஹ்முதுல்லா (54) ஆகியோரும் அரைசதங்கள் எடுத்தனர்.

  தமிம் இக்பால், மொகமது அலி ஆகியோரை தனஞ்ஜயா அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த வங்கதேச அணியை 99/4 என்ற நிலையிலிருந்து முஷ்பிகுர், மஹ்முதுல்லா இணைந்து 5வது விக்கெட்டுக்காக சதக்கூட்டணி அமைத்து மீட்டனர், உண்மையில் மேட்ச் வின்னிங் கூட்டணி என்றால் மிகையாகாது.

  பந்து வீச்சில் மெஹதி ஹசம் மிராஸ், 4 விக்கெட்டுகளை அதாவது தனஞ்ஜயா (9), தனுஷ்க குணதிலக (21), இலங்கை கேப்டன் குசல் பெரேரா (30), அஷன் பந்தாரா (3) ஆகியோரை வீழ்த்தி இலங்கை அணியின் முதுகெலும்பை உடைத்தார்.

  அதன் பிறகுதான் ஹசரங்கா சரவெடி விட்டார். ஆனாலும் இலங்கையினால் இலக்கை கடக்க முடியவில்லை, செவ்வாயன்று இதே டாக்காவில் 2வது போட்டி நடைபெறுகிறது இதில் வங்கதேசம் ஒருநாள் தொடரை வெல்லாமல் இருக்க வேண்டுமெனில் இலங்கை அணி தன் முயற்சிகளை ஒன்று திரட்டி வெற்றி பெற்றாக வேண்டும். ஆட்ட நாயகனாக வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் தேர்வு செய்யப்பட்டார்.
  Published by:Muthukumar
  First published: