பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம் பெற்றிருந்த, நிக் மேட்டின்சன் மன அழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இருந்த நிக் மேட்டின்சன் மனஅழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

நிக் மேட்டின்சன்
27 வயதான மேட்டின்சன் 3 டெஸ்ட் மற்றும் 6 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். அவருக்கு பதிலாக கேமரூன் பான்கிராப்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தங்களுடைய மனநிலையை வீரர்கள் வெளிப்படையாகச் சொல்கிறார்கள். எங்களுக்கு வீரர்களின் நலனே முக்கியம். எனவே நிக் மேட்டின்சனுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வழங்கும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரி பென் ஓலிவர் கூறியுள்ளார்.
நிக் மேட்டின்சன் இதுபோன்ற ஒரு காரணத்துக்காக அணியிலிருந்து விலகுவது முதல்முறையல்ல. ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று டெஸ்டுகளில் விளையாடிய பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து 2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் மன அழுத்தம் காரணமாக தற்காலிக ஓய்வு எடுப்பதாகக் கூறினார்.
கடந்த மாத இறுதியில், மன அழுத்தம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகினார். இதையடுத்து தற்போது நிக் மேட்டின்சனும் அதே காரணத்தைக் கூறி பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.