முதல் டி20: நாகின் டான்ஸ் ஆடி ரொம்ப நாளாச்சு- வங்கதேசத்தை நொறுக்கிய நியூஸிலாந்து

முதல் டி20: நாகின் டான்ஸ் ஆடி ரொம்ப நாளாச்சு- வங்கதேசத்தை நொறுக்கிய நியூஸிலாந்து

டி20-யில் வென்ற நியூஸிலாந்து.

ஹேமில்டன் நகரில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியை அடித்து நொறுக்கியது நியூஸிலாந்து அணி.

  • Share this:
ஹேமில்டன் நகரில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியை அடித்து நொறுக்கியது நியூஸிலாந்து அணி.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்களை விளாசித்தள்ள, தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று நியூஸிலாந்து முன்னிலை வகிக்கிறது.

நியூஸிலாந்து அணியின் புதிய பேட்டிங் நட்சத்திரம் டெவன் கான்வே 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 92 ரன்கள் விளாசினார், இவர் சரியான பார்மில் இருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் கான்வே 72 மற்றும் 126 ரன்கள் விளாசினார். இதனையடுத்து நியூஸிலாந்து 210 ரன்கள் விளாசியது.

தொடர்ந்து ஆடிய போது இஷ் சோதி முதல் 2 ஓவர்களில் 4 வங்கதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றி 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று ஸ்பெல்லை முடிக்க அது வங்கதேசத்தின் பல்லை உடைத்தது.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் செய்தது. அறிமுக வீரர் ஃபின் ஆலன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இவரை வீழ்த்தியவரும் வங்கதேச அறிமுக வீரர் நசும் அகமதுதான் (2/30).

பிறகு மார்டின் கப்திலுடன் ( 27 பந்து 35 ரன், 3 நான்குகள் 2 ஆறுகள்) டெவன் கான்வே 52 ரன் கூட்டணி அமைத்தார். பிறகு வில் யங் (53) உடன் இணைந்து டெவன் கான்வே 105 ரன்களைச் சேர்த்தார்.

17வது ஓவரில் யங் அவுட் ஆகும் போது நியூஸிலாந்து 158/3. மெஹதி ஹசன் (1/37) இவர் விக்கெட்டைக் காலி செய்தார். பிறகு கிளென் பிலிப்ஸ் (10 பந்தில் 24) சேர டெவன் கான்வேவும் இவரும் சேர்ந்து ஆட்டமிழக்காமல் 4வது விக்கெட்டுக்காக மேலும் 52 ரன்கள் சேர்க்க நியூஸிலாந்து 210 ரன்களை எட்டியது.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 3வது ஓவரில் டிம் சவுதியிடம் லிட்டன் தாஸ் (4) விக்கெட்டை இழந்தது. காயத்திலிருந்து மீண்டு வந்த லாக்கி பெர்கூசன் மொகமட் நயிம் ஷேக்கை எல்.பி.ஆக்க பிறகு இஷ் சோதி புகுந்தார்.

சவுமியா சர்க்கார் (5) விக்கெட்டை தன் பந்துவீச்சில் தானே கேட்ச் ஆக்கி வீழ்த்தினார். முகமது மிதுன் (4) பவுல்டு ஆனார், மஹ்முதுல்லா (11), மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோரையும் சடுதியில் அனுப்பினார். 8 பந்துகளில் வங்கதேச அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார் சோதி.

வங்கதேச அணி 59/6 என்று சரிய, ஆபீப் ஹுசைன் 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். முகமது ஷைபுதின் 34 நாட் அவுட் என்று முடிய இருவரும் 63 ரன்களை 7வது விக்கெட்டுக்காகச் சேர்த்து ஒரு பயனும் இல்லாமல் போனது. ஆட்ட நாயகன் டெவன் கான்வே தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையே 2வது டி20 போட்டி நேப்பியரில் செவ்வாயன்று தொடங்குகிறது.
Published by:Muthukumar
First published: