புனேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 50வது ஓவர் எனும் அக்னி பரீட்சையை எதிர்கொண்ட நடராஜன் அற்புதமாக வீசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
புனேயில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் நேற்று சாம் கரன் 83 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார். ஷர்துல் தாக்கூரின் ஒரே ஓவரில் 18 ரன்கள் விளாசி இந்திய கேப்டன் விராட் கோலியின் வயிற்றில் புளியைக் கரைத்தார் சாம் கரன்.
ஆனால் கடைசியில் ஒரு ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் டி.நடராஜனிடம் கடைசி ஓவரைக் கொடுத்தார் விராட் கோலி. இது உண்மையில் பார்த்தால் தவறுதான், ஒரு பிரஷர் சூழ்நிலையில் அனுபவ வீரரை வீசச் செய்வதுதான் முறை.
48வது ஓவரை நடராஜனை வீசச் செய்து விட்டு, 49 ஹர்திக், 50, புவனேஷ்வர் என்றுதான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், நேற்று ஒருவேளை நடராஜனை சாம் கரன் அடித்திருந்தால் நிச்சயம் கெட்ட பெயர் நடராஜனுக்குத்தானே தவிர தவறாகக் கொடுத்த கோலியின் மேல் விமர்சனங்கள் எழாது.
ஆனால் நடராஜன் இந்த கடைசி ஓவர் அக்னிப்பரீட்சையை அனாயாசமாகக் கடந்தார், அபாரமாக வீசி வெற்றி பெறச் செய்தார்.
ஏனெனில் 47வது ஓவரில் சாம் கரன் எழுச்சி பெற்று ஷர்துல் தாக்கூரை 18 ரன்கள் விளாசினார். இதனையடுத்து இங்கிலாந்து 307/8 என்று வெற்றி பெறும் நிலைக்கு வந்தனர். 3 ஓவர் 23 என்ற வெற்றி பார்முலாவை இங்கிலாந்து எட்டியது.
ஆனால் 48வது ஓவரை புவி வைடு போட்டாலும் அற்புதமாக வீசி 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார். அடுத்த ஹர்திக் பாண்டியா ஓவரை சாம் கரன் குறிவைத்து தாக்கியிருக்க வேண்டும், ஹர்திக் ஒன்றும் அடிக்க முடியாத அளவுக்கு வீசவில்லை. ஆனால் சாம் கரன் சிங்கிள் எடுப்பதிலேயே குறியாக இருந்தார்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் நடராஜன் அழைக்கப்பட்டார், நீண்ட விவாதம் நடந்தது, கோலி, ரோகித் சர்மா என்று கூடிக்கூடி பேசினர்.
நடராஜனின் முதல் யார்க்கர் பந்தை லாங் ஆனுக்கு தள்ளிவிட ஹர்திக் பாண்டியாவின் அபார த்ரோவுக்கு பேட்டிங் முனையில் உட் ரன் அவுட் ஆனார்.
டாப்லி வந்தவுடன் 1 ரன் எடுத்தார். சாம் கரன் ஸ்ட்ரைக்குக்கு வர, நடராஜன் ஃபுல் பந்தை வீசினார் கரன் ரன் இல்லை, 4வது பந்து யார்க்கரை மிஸ் செய்தாலும் அடிக்க முடியவில்லை. ஒரு பவுண்டரிதான் அடிக்க முடிந்தது இந்தியா வென்றது, நடராஜன் 10 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக் கொடுத்தாலும் கடைசி ஓவர் அக்னிப் பரீட்சையில் வென்றார்.
இதனை அங்கீகரித்த சாம் கரன் ஆட்ட நாயகன் விருது வென்றவுடன் சேனலுக்குக் கூறிய போது, “வெற்றி பெற முடியவில்லை, ஆனால் நான் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கிலாந்துக்காக இது போன்ற ஒரு இன்னிங்ஸை ஆடியதில்லை.
வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. உள்ளேயிருந்து மெசேஜ் வந்து கொண்டேயிருந்தன, ஸ்ட்ரைக்கை நான் வைத்து கொள்ள வேண்டும் என்றும் கடைசி வரை நில் என்றும் ஆலோசனைகள் வந்தவண்ணம் இருந்தன.
நடராஜனுக்கு 6 பந்துகள் இருந்தன. எங்களுக்கு 14 ரன்கள். ஆனால் இந்த 6 பந்துகளில் தான் ஏன் ஒரு சிறந்த டெத் பவுலர் என்பதை நடராஜன் நிரூபித்து விட்டார். புவனேஷ்வர் குமார் ஒரு தனித்துவ பவுலர்.
நிறைய கற்றுக் கொண்டேன், ஆனால் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ஐபிஎல் தொடரில் ஆட எனக்கு நிறைய நம்பிக்கையை தந்துள்ளது. நேராக சிஎஸ்கே செல்கிறேன்” என்றார் சாம் கரன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.