முதல் இந்திய வீரர் நடராஜன்! வலைப் பந்துவீச்சாளராக வந்து ஒரே தொடரில் அனைத்து வடிவங்களிலும் ஆடினார்- ஐசிசி பாராட்டு

டி.நடராஜன் முதல் இந்திய வீரர்- ஐசிசி பாராட்டு.

“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நடராஜனை வரவேற்கிறோம். ஒரே பயணத்தில் இடம்பெற்று, ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன்தான்”

 • Share this:
  ஆஸ்திரேலிய தொடருக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்துச் செல்லப்பட்ட டி.நடராஜன் அங்கு ஒருநாள், டி20, இன்று டெஸ்ட் போட்டி என்று அனைத்து சர்வதேச வடிவங்களிலும் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்று ஐசிசி பாராட்டியுள்ளது.

  கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடராஜனுக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்காமல் ஒழித்தது.

  13-வது ஐபிஎல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்க்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன். இவர் பந்து வீச்சு டெஸ்ட் போட்டிக்கு உதவாது என்று கூறப்பட்டது. ஆனால் இன்று அசத்திய அவர் மேத்யூ வேட், லபுஷேனை மிகவும் சோதனையான ஒரு கட்டத்தில் வீழ்த்தி இந்திய அணிக்கே நம்பிக்கை ஊட்டினார்.

  அதுவும் நவ்தீப் சைனி பாதியிலேயே காயத்தால் வெளியேறினார். அப்போது இனி விக்கெட்டுகள் விழுமா என்ற நிலையில் இரண்டு ஷார்ட் பிட்ச் பந்துகளில் வேட், லபுஷேனை இன்று வெளியேற்றினார்.

  முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன் டி20 தொடரை இந்தியா வெல்ல முக்கியப் பங்காற்றினார்.

  இதனையடுத்து ஹர்திக் பாண்டியா தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டாலும் உண்மையான நாயகன் நடராஜன் தான் என்றார் ஹர்திக்.

  டெஸ்ட் போட்டியில் அவர் பந்து வீச்சு 132 கிமீ வேகத்துக்கு மேல் இல்லை. ஆனாலும் இன்று தன் டைட் பந்து வீச்சினால் அசத்தினார், முதல் ஸ்பெல்லில் ஒரு பவுண்டரி கூட இவரை அடிக்க முடியவில்லை. 63 ரன்களில் 5 பவுண்டரிகளையே இன்று விட்டுக் கொடுத்தார்.

  நடராஜனின் டெஸ்ட் போட்டி அறிமுகம் குறித்து ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது. ஐசிசி ட்விட்டரில் வெளியிட்ட பாராட்டுச் செய்தியில், “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நடராஜனை வரவேற்கிறோம். ஒரே பயணத்தில் இடம்பெற்று, ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன்தான்” எனப் பாராட்டியுள்ளது.

  ஆம் முதலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்த நிலையில் இன்னொரு வீரர் காயத்தினால் சேர்க்கப்பட்டார், இன்று டெஸ்ட் போட்டியில் பும்ரா காயமடைந்ததினால் சேர்க்கப்பட்டார். இவரை பதிலி, மாற்று வீரராகவே இந்திய அணி நிர்வாகம் கருதியது, ஆனால் தன் அயராத கடின உழைப்பால் இன்று 3 வடிவங்களிலும் ஒரே தொடரில் இடம்பெற்று, இன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்தியுள்ளார்.

  போகப்போக இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டினால் இன்னொரு ஜாகீர் கானை நாம் பெற்றுவிட்டதாகக் கருதலாம்.
  Published by:Muthukumar
  First published: