இப்படிப்பட்ட பிட்ச்களில் ஆடினால் பேட்டிங் ரிதமே போய் விடும், எந்த அணியாக இருந்தாலும் சரி: நாசர் ஹுசைன் தாக்கு

இப்படிப்பட்ட பிட்ச்களில் ஆடினால் பேட்டிங் ரிதமே போய் விடும், எந்த அணியாக இருந்தாலும் சரி: நாசர் ஹுசைன் தாக்கு

நாசர் ஹுசைன்.

அம்பயரிங்கும் சராசரிக்கும் கீழ் உள்ளது. ஆனால் நாம் அம்பயரிங் குறித்து விமர்சனம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

 • Share this:
  அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் அக்சர் படேல் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து அணி 112 மற்றும் 81 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. 5 நாட்கள் வேண்டாம் 4நாட்களாவது ஒரு டெஸ்ட் போட்டி சென்றால்தான் அதன் பெயர் டெஸ்ட் போட்டி. ஆனால் ஒன்றரை நாளில் முடிந்தது அகமதாபாத் டெஸ்ட்.

  இது குறித்த நியாயமான விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளத் திராணியில்லாமல் பிட்ச் பற்றிய விமர்சனம் டூ மச் என்றும் அதிகம் என்றும் முட்டுக்கொடுப்பதும் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன.

  இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

  இந்த வகையான பிட்ச்களில் ஒருமுனையில் ஒருவர் ஸ்பின் செய்கிறார், மறுமுனையில் பந்து சறுக்கிக் கொண்டு நேராக வருகிறது, இப்படியிருந்தால் நிச்சயம் எந்த அணியாக இருந்தாலும் பேட்டிங் ரிதம் காலியாகி விடும், இந்தியாவும் சரியாக ஆட முடியவில்லையே? இதுதான் அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளை இத்தகைய பிட்ச்களில் நடத்துவது வீரர்கள் மனநிலையில் ஏற்படுத்தும் தாக்கமாகும்.

  இங்கிலாந்து வீரர்கள் 2வது இன்னிங்ஸில் வேட்டையாடப்படும் முயல்கள் போல் ஆகிவிட்டனர். 81 ஆல் அவுட் பிட்ச் அல்ல இது, ஆனால் சென்னையை விட கடினமான ஆட்டக்களமாகும். சென்னைபோன்ற பிட்ச்களை நான் ஆழமாக வெறுக்கிறேன்.

  அக்சர் படேல் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசினார், சில பந்துகள் திரும்பின, சில பந்துகள் திரும்பவில்லை. அவரது விக்கெட் பந்துகள் அனைத்தும் நேர் நேர் தேமா பந்துகள்தான். உடனே அனைவரும் நேர் பந்தை ஆட முடியவில்லையா என்பார்கள். ஆனால் அதற்கு முந்தைய பந்துதான் சிக்கல், அடுத்த பந்து நேர் பந்து எனும்போது பேட்டிங் ரிதம் காலியாகி விடும்.

  சென்னை பிட்சில் சும்மா தூக்கிப் போட்டாலே பந்துகள் பயங்கரமாக ஸ்பின் ஆகின்றன. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் என்ன தோன்றும் சரி பந்துகள் ஸ்பின் பயங்கரமாக ஆகும் என்றுதானே? ஆனால் பந்து பிட்ச் ஆகி முழங்காலுக்குக் கீழ் நேராக வேகமாக வருகிறது. திரும்பவில்லை, ஸ்பின் ஆகும் என்று எதிர்பார்த்தால் வேகமாக முழங்காலுக்குக் கீழ் நேராக அடுத்த பந்து வருகிறது, பவுன்சை நம்ப முடியவில்லை. பிட்ச் பற்றிய விமர்சனங்கள் வெளியிலிருந்துதான் வருகின்றனவே தவிர இங்கிலாந்து வீரர்கள் ஒன்றும் சொல்லவில்லை.

  அடுத்த டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்றால் 2-2 என்பது தொடரின் நியாயமான முடிவாகவே இருக்கும். ஆனால் அது தொலைதூரக் கனவுதான் ஏனெனில் இங்கிலாந்து கடந்த 5 இன்னிங்ஸ்களில் 200 ரன்களை எட்டவில்லை. முதல் இன்னிங்சில் ரன்களைக் குவித்தால்தான் உண்டு.

  அம்பயரிங்கும் சராசரிக்கும் கீழ் உள்ளது. ஆனால் நாம் அம்பயரிங் குறித்து விமர்சனம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

  இவ்வாறு கூறினார் நாசர் ஹுசைன்.
  Published by:Muthukumar
  First published: