• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஸ்காட்லாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த நமீபியா;முதல் ஓவரிலேயே 3 விக். வீழ்த்திய ட்ரம்பிள்மேன்

ஸ்காட்லாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த நமீபியா;முதல் ஓவரிலேயே 3 விக். வீழ்த்திய ட்ரம்பிள்மேன்

நமீபியா பிரமாதம் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

நமீபியா பிரமாதம் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

  • Share this:
    டி20 உலகக்கோப்பையில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியை நமீபியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக்கோப்பைப் பிரதான சுற்றில் முதன் முதலாக வென்று வரலாறு படைத்தது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரூபன் ட்ரம்பிள்மேன் 4 ஓவர் 17 ரன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மற்றொரு இடது கை மீடியம் பாஸ்ட் பவுலர் ஸ்மிட் 4 ஓவர் 20 ரன் 1 விக்கெட் என்று அசத்த ஸ்காட்லாந்து அணி 109/8 என்று மடிந்தது. பிறகு இலக்கை விரட்டிய நமீபியா அணி 67/4 என்று கொஞ்சம் திணற மீண்டும் ஸ்மிட் இறங்கி 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 23 பந்துகளில் 32 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக இருந்து ஆட்டத்தை முடிக்க நமீபியா 115/6 என்று அபார வெற்றி பெற்றது.

    தகுதிச் சுற்றில் அயர்லாந்தை வெளியேற்றி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்ற நமீபியா 3 வெற்றிகளுடன் சாதனை படைத்துள்ளது. ஸ்மிட் மற்றும் டேவிட் வீஸ் (16) முக்கியமான கட்டத்தில் 35 ரன்கள் கூட்டணி அமைக்க ஸ்காட்லாந்து 2வது போட்டியை தோற்று டி20 உலகக்கோப்பைக் கனவைத் தகர்த்து விட்டது.

    ஸ்காட் லாந்து அணி தொடங்கும்போதே அதிர்ச்சிக் காத்திருந்தது, ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சே வெளியே போன ஓணானை வேட்டிக்குள் இழுத்து விட்ட கதையாய் பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார். மெக்லியாடுக்கு இடது கை வீச்சாளருக்கே உரிய உடலுக்கு குறுக்கே செல்லும் பந்தை வீச அவர் எட்ஜ் செய்து வெளியேறினார், அடுத்த பந்தே நேர் இன்ஸ்விங்கரில் கேப்டன் ரிச்சி பெரிங்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். கிரெய்க் வாலஸ் 4 ரன்களில் வீஸிடம் எல்.பி.ஆக ஸ்காட்லாந்து 18/4 என்று நொடிந்தது.

    மேத்யூ கிராஸ் 33 பந்துகளில் 19 என்று திக்கி திணற, மைக்கேல் லீஸ்க் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 44 விளாசினார், இவருக்கு உறுதுணையாக ஆடிய அமேசான் டெலிவரி டிரைவர் கிறிஸ் கிரீவ்ஸ் 25 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து 109/8 என்று முடிந்தது.

    இலக்கை விரட்டிய நமீபியாவில் கிரெய்க் வில்லியம்ஸ், மைக்கேல் வான் லிஞ்ஜன் 28 ரன்கள் சேர்த்தனர். ஆனால் சஃப்யான் ஷரீப் இந்த ஜோடியை உடைத்தார். வான் லிஞ்ஜன் 18 ரன்களில் வெளியேற கிறிஸ் கிரீவ்ஸ் தன் லெக் ஸ்பின் மூலம் விக்கெட் கீப்பர் சேன் கிரீனை 9 ரன்களுக்கு வெளியேற்றினார். ஸ்பின்னர்கள் லீஸ்க் மற்றும் மார்க் வாட் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஆனால் ஸ்மிட் பிரமாதமாக ஆடி நமீபியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றார். பிரிவு பியில் நமீபியா 2 புள்ளிகள் பெற்று விட்டது, இந்தியா 0 புள்ளியில் உள்ளது. நியூசிலாந்து 0, ஸ்காட்லாந்து 0.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: