தெலுங்கானாவிலிருந்து ஒரு நடராஜன்... தடைகளை தகர்த்து சாதித்த முகமது சிராஜ்

முகமது சிராஜ்

ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளியின் மகன் " பாக்ஸிங் டே " டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி தனது அசாத்திய திறமையால், ஜாம்பவான்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்திலிருந்து யார்க்கர் மன்னன் நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானது போல் தெலுங்கானாவிலிருந்து முகமது சிராஜ் என்னும் வேகப்புயல் இந்திய அணிக்கு கிடைத்துள்ளதை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டும் முகமது கவுஸ், வீட்டு வேலை செய்யும் ஷபானா பேகம் ஆகியோரின் மகன் தான் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் 26 வயதான முகமது சிராஜ். மிகவும் ஏழ்மையான பின்னணியிலிருந்து பல்வேறு தடைகளையும், சோதனைகளையும் தகர்த்தெறிந்து இந்திய அணியில் சாதித்துகாட்டியிருக்கிறார் சிராஜ்

தான் அறிமுகமான வரலாற்று சிறப்பு மிக்க " பாக்‌ஷிங் டே" டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வெளிநாட்டு மண்ணில் அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்து ஜாம்பவான் வரிசையில் தனது பெயரை பதித்துள்ளார் முகமது சிராஜ்.

தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத சிராஜ் தனது அசாத்திய விக்கெட்டுகள் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆம் கடந்த 20 ம் தேதி அவரது தந்தை நுரையீரல் நோய் காரணமாக உயிரிழந்தார். ஆனால் சிராஜ் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு சென்றிருப்பதால்  நாடு திரும்ப முடியவில்லை. தந்தையை இழந்த சோகம், இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத வேதனை என அனைத்தையும் தனது பந்துவீச்சில் வெளிப்படுத்தி விக்கெட்டுகள் மூலம் தந்தையின் கனவை மெய்பித்திருக்கிறார் சிராஜ்.

ஆட்டோ ஓட்டும் தொழிலாளியின் மகனான சிராஜ் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் தெருக்களில் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். கிராமத்தில் நடக்கும் போட்டிகளில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வந்த சிராஜிற்கு ஹைதராபாத்தில் உள்ள கிளப் போட்டிகளில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி ஹைதராபாத் ரஞ்சி அணிக்கு தேர்வாகினார். 2016 - 17 ம் ஆண்டு ரஞ்சி போட்டியில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத்தின் வேகப்புயலாக உருவெடுத்தார்.

இதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சாதித்து வருகிறார். நடப்பாண்டில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட வரலாற்று சிறப்பு மிக்க பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாட சிராஜிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதை சாதனையாக மாற்றியமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் முகமது சிராஜ். இந்தியா சர்வதேச வேகப்பந்துவீச்சாளரை அடையாளம் கண்டுள்ளது என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

மகனே இந்தியாவிற்கு நீ பெருமை சேர்க்க வேண்டும். இது சிராஜின் தந்தை கூறிய வார்த்தை. இதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் தந்தை சொல் தட்டா முகமது சிராஜ்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: