டெஸ்ட் தொடர் வெற்றியை அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய முகமது சிராஜ், காலமான தனது தந்தையின் கல்லறைக்கு சென்று தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய அணியின் இளம் படை ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் புதுமுகமாக அறிமுகமாகினர். புதுமுக மற்றும் அதிக அனுபவம் இல்லாத கத்துக்குட்டி வீரர்களை வைத்துக்கொண்டே இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்க வீரராக பங்களிப்பை அளித்தவர் வேகப்பந்து வீச்சாளாரான முகமது சிராஜ். நவம்பர் மாதம் டி-20 தொடர் நடந்து கொண்டிருந்த போது முகமது சிராஜின் தந்தை முகமது கவுஸ் காலமானார். சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையிலும் முகமது சிராஜ் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் , இந்திய அணிக்காக தனது மகன் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துக்காக ஆஸ்திரேலியாவிலேயே டீமுடன் இருந்தார்.
இந்த நிலையில் தான் மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் இந்திய அணியில் அறிமுகமானார். இந்த டெஸ்டில் 13 விக்கெட்களை வீழ்த்தி முகமது சிராஜ் மைல்கல் சாதனையை படைத்தார். பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது போட்டியில் 5 விக்கெட்கள் விழ்த்தி இந்திய அணிக்காக சாதனையும் படைத்தார் சிராஜ்.
ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு ஹைதராபாத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிய முகமது சிராஜ், அங்கிருந்து நேரடியாக தனது தந்தையின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி, அதுவே எனது தந்தையின் லட்சியமும் கூட. அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். ஆனால் அவர் இல்லை, இருப்பினும் அவரின் ஆசி எனக்காக இனி எப்போதும் இருக்கும் என்றார் சிராஜ்.
தந்தை மறைவுக்கு பிறகு என் தாயாரிடம் தொலைபேசியில் பேசினேன். அவருடன் பேசிய பிறகு தான் எனக்குள் தன்னம்பிக்கை பிறந்தது. என்னை மனரீதியில் வலிமைப்படுத்தியது என் தாயார் தான். எனது தந்தையின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது என்று சிராஜ் தெரிவித்தார்.