Australia vs West Indies | மிட்செல் ஸ்டார்க்கின் ‘சென்சேஷனல்’கடைசி ஓவர்; ரசலுக்கு 5 டாட் பால்கள்- ஆஸ்திரேலியாவுக்கு ‘த்ரில்’ வெற்றி

ஆஸ்திரேலிய அணி.

கிராஸ் ஐஸ்லெட்டில் நேற்று இரவு நடைபெற்ற 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 189 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா பிறகு வெஸ்ட் இண்டீஸை 185 ரன்களுக்கு த்ரில் போட்டியில் மட்டுப்படுத்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

  • Share this:
    கிராஸ் ஐஸ்லெட்டில் நேற்று இரவு நடைபெற்ற 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 189 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா பிறகு வெஸ்ட் இண்டீஸை 185 ரன்களுக்கு த்ரில் போட்டியில் மட்டுப்படுத்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மே.இ.தீவுகள் ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில் 3-1 என்று உள்ளது.

    மிட்செல் ஸ்டார்க்கின் அந்த கடைசி ஓவர்:

    18வது ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 154/5 என்று இருந்தது. 12 பந்துகளி 36 ரன்கள் வெற்றிக்குத் தேவை. அப்போது 19வது ஓவரை மெரிடித் வீசினார். ஆந்த்ரே ரசல், ஃபேபியன் ஆலன் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கிரீல் இருந்தனர்.



    இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்பு முனையாகி வெஸ்ட் இண்டீசுக்கு ஒரு வெற்றி வாய்ப்பை அளித்தது, மெர்டித் வீசிய முதல் பந்து லோ ஃபுல்டாஸ் லாங் ஆனில் சிக்ஸ். அடுத்த பந்தில் ரசல் சிங்கிள் எடுக்க ஃபேபியன் ஆலன் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். மீண்டும் ஒரு புல்டாஸ் வீச லாங் ஆனில் மிகப்பெரிய சிக்ஸ். அடுத்த 2 பந்துகளும் ஸ்லோ பந்துகள் இரண்டும் சிக்சருக்கு காணாமல் போக வரிசையாக 3 சிக்சர்கள், மொத்தம் 4 சிக்சர் ஒரு சிங்கிள் என்று 25 ரன்கள் அந்த ஓவரில் வந்தது. கடைசி பந்தில் ஃபேபியன் ஆலன் 14 பந்துகளில் 2 நான்கு 4 சிக்சர் என்று 29 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    ஆகவே கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவை. ஆந்த்ரே ரசல் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். மிட்செல் ஸ்டார்க் வீச வந்தார். அவர் ஏற்கெனவே 3 ஓவர்களில் 31 ரன்கள் வாங்கியுள்ளார். ரசலைக் கட்டுப்படுத்துவாரா என்று த்ரில் தொடங்கியது. எதிர்முனையில் ஹெய்டன் வால்ஷ் என்ற புதிய வீரரிடம் ஸ்ட்ரைக்கை கொடுக்க மறுத்த ஆந்த்ரே ரசல் ஸ்டார்க்கின் யார்க்கர்களை பெரிய ஷாட் ஆட முடியவில்லை. யார்க்கர், லோ ஃபுல் டாஸ் என்று ஸ்டார்க் வீச 5 பந்துகளில் ரன் எதுவும் வரமால் டாட் பால்கள் ஆயின.

    ஆந்த்ரே ரசல் போன்ற இடி போன்று தாக்கும் வீரருக்கு 5 டாட்பால்கள் அதுவும் டி20 கடைசி ஓவரில் ஸ்டார்க் போட்டுள்ளார், கடைசி பந்தில் ரசல் சிக்ஸ் அடித்தார், ஆனால் பயனில்லாமல் போனது 185/6 என்று முடிந்தது மே.இ.தீவுகள். ஆஸ்திரேலியா தன் முதல் வெற்றியை ஈட்டியது. ரசல் 13 பந்துகளில் 24 என்று முடிந்தார்.

    முன்னதாக 4வது முறையாக டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஏரோன் பிஞ்ச் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். மேத்யூ வேட் 5 ரன்களில் ஒஷேன் தாமஸ் பந்தில் வெளியேற, கேப்டன் ஏரோன் பிஞ்ச் (53 ரன்கள், 5 பவுண்டரி 3 சிக்ஸ் 37 பந்துகள்), மிட்செல் மார்ஷ் ஒன்று சேர்ந்தனர்.

    இருவரும் போட்டு சாத்தி எடுத்தனர். 10 ஓவர்களில் 114 ரன்களை இருவரும் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் ரொம்ப உக்கிரமாக இருந்தார். 44 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சர்களை விளாசி 75 ரன்கள் எடுத்தார். ஆனால் பிஞ்ச், அலெக்ஸ் கேரி (0) இருவரும் வால்ஷிடம் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். ஆஷ்டன் டர்னரையும் வால்ஷ் வீழ்த்தி இந்த அதிரடியிலும் 4 ஓவர் 27 ரன் 3 விக்கெட் என்று அசத்தினார். மிட்செல் மார்ஷ் 18வது ஓவரில் பேபியன் ஆலனிடம் வெளியேறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடைசியில் டேன் கிறிஸ்டியன் 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 22 ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 189/6 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

    சிம்மன்ஸ், எவின் லூயிஸ் மிரட்டல் அதிரடிக்குப் பிறகு மிட்செல் மார்ஷ், ஆடம் சாம்ப்பா அசத்தல்:

    190 ரன்கள் இலக்கை விரட்டக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி தொடக்கம் கண்டது, எவின் லூயிஸ், லெண்டில் சிம்மன்ஸ் 5 ஓவர்களில் 62 ரன்கள் விளாசினர். எவின் லூயிஸ் 14 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து சாம்பா பந்தில் ஒதுங்கிக் கொண்டு ஆடும் முயற்சியில் பவுல்டு ஆனார். உண்மையில் விக்கெட்டைத் தூக்கி எறிந்தார். யுனிவர்ஸ் பாஸ் கெய்ல் இறங்கி 1 ரன்னில் வெளியேறினார். மிட்செல் மார்ஷ் வீசிய வைடு பந்தை கெய்ல் லாங் ஆனில் விளாச அங்கு உயரமான பீல்டர் பெஹெண்ட்ராப் எல்லைக்கோடு அருகே எம்பிப்பிடித்தார். ஆந்த்ரே பிளெட்சரையும் ஆடம் ஜாம்பா பவுல்டு செய்தார். 97/3 என்று 11வது ஓவரில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ்.

    ஆடம் ஜாம்ப்பா.


    அதன் பிறகு பூரன் (16), சிம்மன்ஸ் இணைந்து ஸ்கோரை 132 ரன்களுக்குக்கொண்டு சென்றனர் இந்தக் கட்டத்தில்தான் வெஸ்ட் இண்டீஸ் ரன் ரேட் குறைக்கப்பட்டது. பூரனை மார்ஷ் வீழ்த்தினார்.

    கடைசி 3 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதுதான் ஸ்டார்க் 18வது ஓவரில் 11 ரன்களைகொடுக்க 19வது ஓவரில் மெரிடித்தை பேபியன் ஆலன், ரஸல் வெளுத்து வாங்கினர் 4 சிக்சர்களுடன் அந்த ஓவரில் 25 ரன்கள் வர கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை எனும்போதுதான் மிட்செல் ஸ்டார்க் 5 டாட்பால்களை வீசி ஆட்டத்தை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

    ஆடம் ஜாம்ப்பா 20 ரன்களுகு 2 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    ஆல்ரவுண்ட் திறமையைக் காட்டிய மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published: