ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகள் முடிந்த நிலையில், இரண்டிலும் இந்திய அணி அபாரவெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியால் 3 நாள்கள் கூட தாக்குபிடிக்க முடியாத வகையில் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. குறிப்பாக, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கான காரணங்களை அடுக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய மண்ணில் எந்த பயிற்சி போட்டியும் விளையாடவில்லை. இது மிக மிகப் பெரிய தவறாகும்.
குறைந்தது ஒரு பயற்சி போட்டியாவது விளையாடி இருந்தால் இந்திய ஆடுகளத்தின் தன்மை அணிக்கு பழகியிருக்கும். அணியின் தேர்வில் உள்ள தவறுகளும் மோசமான ஆட்டத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.
இதையும் படிங்க: 'விராட் கோலி டெம்ப்ளேட்.. தனி ஸ்டைல் இல்லை..' ரோஹித் சர்மாவை வார்த்தைகளால் வாரிய கம்பீர்!
பலரும் ஸ்வீப் ஷாட் அடித்து விளையாடிய யுக்தி தோல்விக்கு காரணம் என்று விமர்சிக்கிறார்கள். நான் அந்த கருத்துக்கு எதிர் தரப்பில் உள்ளேன்.ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்வீப் ஷாட் விளையாடலாம். அதில் தவறு இல்லை. ஆனால், ஆடுகளத்தின் தன்மை அறிந்து எந்த சூழலில் விளையாட வேண்டும் என்பதை உணர்ந்து ஸ்வீப் ஷாட் விளையாட வேண்டும். பந்து எப்படி ஸ்பின் ஆகிறது என்பது கவனித்து ஆட வேண்டும்.
இந்திய அணி பேட்ஸ்மேன்களிடம் இருந்து ஆஸ்திரேலியர்கள் கற்க வேண்டும். அவர்கள் இந்தியர்களின் பேட்டிங்கை கவனித்து விளையாடினார்களா என்று தெரியவில்லை. அதே போல் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதமான பீல்டிங்கை ஆஸ்திரேலிய கேப்டன் அமைக்கவில்லை. இதுவும் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க எளிமையான சூழலை உருவாக்கிவிட்டது." இவ்வாறு அவர் கூறினார். இரு அணிகளுக்கு இடையே 3ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia