67 ஆல் அவுட் ஆகி இதே கிரவுண்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற பேரதிசயம்

பென் ஸ்டோக்ச் ஹீரோயிசம் 135 நாட் அவுட், இதே கிரவுண்டில்

இந்திய அணி, நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டத்தில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் இதே கிரவுண்டில் 2019-ல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 67 ரன்களுகுச் சுருண்டாலும் டெஸ்ட்டை வெற்றி பெற்று அதிசயம் படைத்தது.

  • Share this:
    ஆஷஸ் தொடரில் இந்த இங்கிலாந்தின் மிராக்கிள் வெற்றியின் நாயகர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்தான். இந்த டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் 135 நாட் அவுட் என்று இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தார், அதாவது தோல்வியிலிருந்து வெற்றிக்கு இட்டுச்சென்றா பென் ஸ்டோக்ஸ். ஜோ ரூட் 80 ரன்கள் எடுத்தார். 300 ரன்களுக்குள் 9 விக்கெட்டை இங்கிலாந்து இழந்தாலும் 362/9 என்று அபார வெற்றி பெற்றது.

    இதே போல்தான் ஹெடிங்லீ அல்லது லீட்சில் 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22 முதல் 25 வரை நடைபெற்றது 2019-ம் ஆண்டில்.

    அப்போது டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியும் 179 ரன்களுக்குச் சுருண்டது. ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியில் இல்லை. மார்னஸ் லபுஷேன் 74 ரன்களை அதிகபட்சமாக எடுக்க வார்னர் 61 எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 67 ரன்களுக்குச் சுருண்டது. ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளையும் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் பேட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 112 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸை ஆடியது. ஆனால் 246 ரன்களுக்குச் சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், மீண்டும் லபுஷேன் 80 ரன்கள் எடுத்தார்.

    359 ரன்கள் இலக்கு இங்கிலாந்து வெற்றி பெறத் தேவை. ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய் சடுதியில் வெளியேற இங்கிலாந்து 15/2 என்று திணறியது. ஆனால் ஜோ ரூட் (77), டென்லி (50) ஆகியோர் ஸ்கோரை 141 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனால் டென்லி, ரூட் இருவருமே லயன், ஹாசில்வுட்டிடம் வெளியேற 159/4 என்று ஆனது இங்கிலாந்து.

    ஆனால் ஜானி பேர்ஸ்டோ (36), பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஸ்கோரை 245 வரை கொண்டு சென்றனர். அதன் பிறகு பேர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ஆர்ச்சர், பிராட் அடுத்தடுத்து வெளியேற 286/9 என்று இங்கிலாந்து தோல்வியின் பிடிக்குச் சென்றது, ஆனால் பென் ஸ்டோக்ஸ் ஒருமுனையில் வீரதீரனாக நிற்கிறார். அவருடன் இடது கை சுழற் பந்து வீச்சாளர் ஜாக் லீக் இறங்கி ஆடினார். ஜாக் லீச் 17 பந்துகள் தாக்குப் பிடித்து 1 ரன் எடுக்க பென் ஸ்டோக்ஸ் ஒரு அதியற்புத இன்னிங்சில் படு த்ரில்லாக அமைந்த டெஸ்ட் போட்டியில் 135 நாட் அவுட் என்று இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்து பேரதிசயம் நிகழ்ந்த்தினார்.

    ஒருமுறை ஜாக் லீச் பிளம்ப் எல்.பி.ஆனார் ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார், ரிவியூ செய்ய ரிவியூ எதுவும் ஆஸ்திரேலியாவிடம் மீதமில்லை. ரன் அவுட் வாய்ப்பு ஒன்றை நேதன் லயன் தவற விட்டார், இங்கிலாந்து அதிசயம் நிகழ்த்தியது. பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன், தொடரில் இங்கிலாந்து 1-1 என்று சமநிலை எட்டியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதே போல் இந்த 3வது டெஸ்ட்டில் இந்தியா அதிசயம் நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    Published by:Muthukumar
    First published: