சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2 முறை ஹட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 387 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை 159 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா தட்டி சென்றார்.
இந்த போட்டியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியின் 33வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், மேற்கிந்திய வீரர்கள் ஹோப், ஹோல்டர், அல்சாரி ஜோசப் ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கி ஹட்ரிக் எடுத்தார்.
இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு குல்தீப் யாதவ் சொந்தக்காரராகியுள்ளார். சர்வதேச அளவில் வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், சமிந்தா வாஸ், டிரென்ட் போல்ட்-வுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதில், 3 ஹாட்ரிக்-வுடன் மலிங்கா முதலிடத்தில் உள்ளார்.குறிப்பாக, இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் குல்தீப் நிகழ்த்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.