ஒரு டி20 போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட்டுகள்...! சாதனை படைத்த இந்திய வீரர்

Vijay R | news18-tamil
Updated: August 24, 2019, 3:06 PM IST
ஒரு டி20 போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட்டுகள்...! சாதனை படைத்த இந்திய வீரர்
கிருஷ்ணப்பா கௌதம்
Vijay R | news18-tamil
Updated: August 24, 2019, 3:06 PM IST
டி20 தொடரின் ஒரு போட்டியில் 134 ரன்கள் குவித்தும் 8 விக்கெட்களை வீழ்த்தியும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து உள்ளார் கிருஷ்ணப்பா கௌதம்.

தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎல் தொடர் போன்று கர்நாடகாவில் நடைபெறும் டி20 தொடரில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கர்நாடகா ப்ரிமீயர் லிக் தொடரில் பெல்லாரி டஸ்கர்ஸ் - சிவமோகா லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டஸ்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டஸ்கர்ஸ் அணியின் கிருஷ்ணப்பா அதிரடியாக விளையாடி பெல்லாரி அணியின் பந்துவீச்சை நான்குபுறமும் சிதறவிட்டார்.

கிருஷ்ணப்பா 56 பந்துகளில் 13 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். 17 ஓவர்கள் முடிவில் டஸ்கர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய பெல்லாரி அணிக்கு பேட்டிங்கில் நெருக்கடி கொடுத்த கிருஷ்ணப்பா பந்துவீச்சிலும் அந்த அணியை திணறவிட்டார். போட்டியின் 2வது ஓவரிலேயே தொடக்க வீரர் அர்ஜூனை வீழ்த்தினார். அதன்பின் அவர் பந்துவீசவில்லை.

பெல்லாரி அணி 11 ஓவர்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது 102 ரன்கள் உடன் வலுவான நிலையில் இருந்தது. 12வது ஓவரிலிருந்து ஆட்டத்தின் போக்கையயே மாற்றினார் கிருஷ்ணப்பா. 12வது ஓவரில் 3 விக்கெட்களையும், எஞ்சிய 2 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்திய கிருஷ்ணப்பா பெல்லாரி அணியை 133 ரன்களில் சுருட்டினார்.

இந்த போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட்கள் வீழ்த்திய கிருஷ்ணப்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகா ப்ரிமீயர் லிக் தொடரில் அரிய சாதனை படைத்த கிருஷ்ணப்பாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உள்ளூர் டி20 போட்டியில் சர்வதேச அளவில் இதுபோன்ற சாதனையை வேறு யாரும் படைக்கவில்லை. இந்திய வீரர் ஒருவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

Also Watch

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...