Home /News /sports /

விராட் கோலிக்கு சிகப்பு அட்டை காட்டி போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும்- நடுவர்களை மிரட்டுகிறார்- டேவிட் லாய்ட் காட்டம்

விராட் கோலிக்கு சிகப்பு அட்டை காட்டி போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும்- நடுவர்களை மிரட்டுகிறார்- டேவிட் லாய்ட் காட்டம்

லாய்ட்- விராட் கோலி.

லாய்ட்- விராட் கோலி.

IND vs ENG இது போன்று நடந்து கொள்ளும் கேப்டன்களை வெளியே அனுப்ப மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை காண்பிக்கும் அதிகாரம் நடுவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். கோலி போன்ற ஒரு பெரிய வீரர் தான் செய்வதிலும் சொல்வதிலும் எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மேலும் படிக்கவும் ...
விராட் கோலி பெரிய வீரராக இருக்கலாம் அதற்காக நடுவர்களை அவமதிப்பதை, நெருக்கடி கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று டேவிட் லாய்ட் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து தொடர் முழுதும் நடுவர்களுக்கு கோலி கடும் நெருக்கடி அளிக்கிறார், நடுவர்களை தொடர்ந்து அவமதிக்கிறார், ஆனால் ஐசிசி பல் பிடுங்கிய பாம்பாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் சாடியுள்ளார்.

அவர் கூறுவது உண்மைதான். ஒருமுறை இலங்கைக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், இலங்கை நடுவரிடம் கேட்டார், ‘அடுத்த போட்டியிலும் நீங்களே நடுவராக இருக்க ஒப்புக் கொள்கிறேன் அர்ஜுனா ரணதுங்காவுக்கு அவுட் கொடுப்பீர்களா மாட்டீர்களா’ என்றார்.

அதே போல் இங்கு பயணிக்கும் அணிகள் விராட் கோலிக்கு அவுட் தருவீர்களா மாட்டீர்களா என்று கேட்கத் தொடங்கும் காலம் அருகில்தான் உள்ளது. இலங்கையில் இவ்வாறு கூறிய இம்ரான் கான், தன் கேப்டன்சியில் என்ன செய்தார், பாகிஸ்தான் நடுவர்கள் இம்ரான் கானை பார்த்துத்தான் அவுட்டே தருவார்கள் என்ற விமர்சனம் உண்டு. ஆனால் யார் இப்படி அதாரிட்டி காட்டினாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானது. விராட் கோலி நடுவர்களை மிரட்டுகிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். கங்குலி போன்றவர்களும் வேடிக்கை பார்க்கின்றனர், சேவாக், லஷ்மண் போன்றவர்கள் நடுவர்களைச் சாடுகின்றனரே தவிர கோலியின் ரவுடித்தனமான நடத்தையை கண்டு கொள்வதில்லை என்பதே இப்போதைய எதார்த்தம்.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் மிகச்சரியான விமர்சனத்தை கோலி மீது வைத்துள்ளார், அவர் கூறியதாவது:

4வது டி20 போட்டியில் டேவிட் மலான் ஒரு தாழ்வான கேட்சை எடுக்கும் போது இங்கிலாந்து வீரர்கள் நடுவரை சாஃப்ட் சிக்னல் அவுட் தருமாறு வலியுறுத்தியதாக கோலி கூறுகிறார், அதை நான் சந்தேகிக்கிறேன்.

சாஃப்ட் சிக்னல் என்பதன் தாத்பரியமே கள நடுவர்களுக்கு அதிகாரம் இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான். அகமதாபாத்தில் நடுவர் நிதின் மேனனை இங்கிலாந்து அழுத்தம் செய்ததா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஒன்றை உறுதியாகக் கூற முடியும், தொடர் முழுதும் கேப்டன் விராட் கோலி நடுவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தார், தொந்தரவு செய்து நெருக்கடி அளித்தார் என்பது உண்மை.

அதே போல் அவுட் ஆகிச் செல்லும் வீரர்கள் மீது கோலி அநாகரீகமாக துவேஷம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார், எதிரணி வீரரை களத்தில் நேருக்கு நேர் மோதல் போக்குடன் அணுகுவதை விராட் கோலி கனகச்சிதமாக செய்து வருகிறார். பல்பிடுங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்க்கின்றது.

விராட் கோலி தொடர்ந்து நடுவர்கள் பற்றி அவதூறாகவும் அவமானப்படுத்தும் விதமாகவும் பேசி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டை நடுவர்கள் நடத்தாமல் ஏதோ இவர்கள்தான் நடத்துபவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.

முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக அம்பயர்ஸ் கால் என்பதை அகற்ற வேண்டும் என்றார். பந்து ஸ்டம்பை லேசாகத் தாக்குவதாக இருந்தாலும் அவுட் தர வேண்டியதுதான் என்கிறார் கோலி.

கோலிக்கு ஒன்றும் தெரியவில்லை, இப்படிச் செய்தால் என்ன ஆகும், பைல்களை தூக்குவது போல் போகும் பந்துகள் எல்லாம் அவுட் என்றால் உலகில் எல்லா டெஸ்ட் போட்டிகளும் 2 நாட்களில் முடிந்து விடும். ஒருநாள் போட்டிகள் அரைநாளில் முடிந்து விடும்.

இது போன்று நடந்து கொள்ளும் கேப்டன்களை வெளியே அனுப்ப மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை காண்பிக்கும் அதிகாரம் நடுவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். கோலி போன்ற ஒரு பெரிய வீரர் தான் செய்வதிலும் சொல்வதிலும் எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

இவ்வாறு கூறினார் டேவிட் லாய்ட்.

ஆம் இவர் கூறுவது உண்மைதான், இவருக்கு மேல் ஆட்டம் போட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் எப்படி சீரழிந்து மக்கள் முன்னிலையில் தலைகுனிய நேரிட்டது என்பதை விராட் கோலி உணர வேண்டும் இல்லையேல் அவருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, India Vs England

அடுத்த செய்தி