விராட் கோலியின் பிரமாத இன்னிங்ஸ் வீண்: பட்லரின் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி

ஜோஸ் பட்லர்.

அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகப்பிரமாதமாக ஆடி 77 ரன்களை எடுக்க அதைவிடவும் அற்புதமாக ஆடிய ஜோஸ் பட்லர் 83 நாட் அவுட் என்று இங்கிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

  • Share this:
அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகப்பிரமாதமாக ஆடி 77 ரன்களை எடுக்க அதைவிடவும் அற்புதமாக ஆடிய ஜோஸ் பட்லர் 83 நாட் அவுட் என்று இங்கிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

டாஸ் வென்ற மோர்கன் மிகச்சரியாக இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். இந்திய அணி மார்க் உட் பந்து வீச்சை ஆடத்தெரியாமல் திக்குமுக்காடி 20 ஓவர்களில் 156/6 என்று முடிந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 158/2 என்று அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் விராட் கோலி ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதியற்புத பேட்டிங்கை வெளிப்படுத்தி 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 46 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இது பட்லரின் ஆகச்சிறந்த டி20 ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியா பேட் செய்த போது மார்க் உட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசி இந்திய அணியை 24/3 என்று சுருக்கினார். அதன் பிறகும் மந்தமாகச் சென்ற இந்திய அணி ஒருமுனையில் கோலியைத் தவிர மற்றவர்கள் சொதப்ப 15 ஓவர்கலில் 87/5 என்று ஆனது.

மார்க் உட் 3 விக்கெட்டுகள்.


ஆனால் கடைசி 5 ஓவர்களில் 69 ரன்கள் விளாசப்பட்டதில் கோலி 49 ரன்களை அடித்தார். இந்திய பீல்டிங் மோசமாக அமைந்தது, பேட்டிங் செய்யும் போது ஒவ்வொரு பவுண்டரிக்கும் சிக்சருக்கும் நெஞ்சை நிமிர்த்தும் கோலி கேட்ச் வந்தால் பிடிக்க மாட்டார் போலிருக்கிறது.

பட்லருக்கு பேக்வர்ட் பாயிண்டில் கேட்சை விட்டார். சாஹல் தேர்ட்மேனில் பேர்ஸ்டோவுக்கு கேட்சை விட்டார். இதனையடுத்து பேர்ஸ்டோ டி20-யில் 1000 ரன்கள் மைல்கல்லை எட்டினார்.
மோர்கனுக்கு இந்த போட்டி சிறப்பு வாய்ந்ததாகும் அவரது 100வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 100 டி20களில் ஆடிய முதல் இங்கிலாந்து வீரர். ரோகித் சர்மா, ஷோயப் மாலிக், ராஸ் டெய்லருக்குப் பிறகு 100 டி20க்களில் ஆடிய 4வது வீரர் ஆனார் மோர்கன்.

இந்தியா இன்னிங்ஸைத் தொடங்கிய போது ராகுலுக்கு என்னாயிற்று என்று தெரியவில்லை, மேட்ச் பிராக்டீஸே இல்லாமல் அவர் ஆடுவதால் மார்க் உட் வீசிய எக்ஸ்பிரஸ் வேக இன் கட்டருக்கு குச்சிகளை இழந்து தொடர்ச்சியாக 2வது டக்கை அடித்தார், இந்தத் தொடரில் ராகுல் 1,0,0 என்று சொதப்பி வருகிறார்.
பிறகு ரோகித் சர்மா (15) ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட போதிய இடம் இல்லை, ஆடினார், கொடியேற்றி கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஏற்கெனவே ஆர்ச்சர் ரோகித்துக்கு கேட்சை விட்ட நிலையில் ரோகித் ஆட்டமிழந்தது இங்கிலாந்துக்கு பெரிய நிம்மதியளித்தது.
இஷான் கிஷன் முதல் போட்டியில் தொடக்க வீரராக இறங்கி பிரமாதமாக ஆடியவரை 3வது நிலைக்கு இறக்கினார் கோலி, இப்படித்தான் வீரர்களின் உத்வேகத்தையே அவர் கெடுத்து வருகிறார். ராகுல் அனுபவசாலி பின்னால் கூட இறங்கலாம், ஆனால் முதல் போட்டியில் வெளுத்து வாங்கி ஒரு நல்ல மனநிலையில் இருக்கும் இஷான் கிஷனை 3ம் நிலையில் இறக்கினார் அவரும் சொதப்பினார். 4 ரன்களில் இஷான் கிஷன் கிறிஸ் ஜோர்டானின் பவுன்சருக்கு இரையானார்.

கோலி-பாண்டியா.


கோலி ரிஷப் பந்த் மறுகட்டுமானம் செய்தனர். ரிஷப் பந்த் 20 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்துஅட்டகாசமாக ஆடி வந்தார், கோலியுடன் சேர்ந்து 6 ஓவர்களில் 40 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஆனால் தேவையற்ற ஒரு 3வது ரன்னுக்காக கோலி ரிஷப் பந்த்தை வா வா என்று அழைக்க ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ஷ்ரேயஸ் அய்யர் பிரமாதமான ஆஃப் டிரைவ் பவுண்டரியுடன் தொடங்கி நீண்ட நேரம் நீடிக்காமல் 9 ரன்களில் மார்க் உட்டின் பந்தை அடிக்கப் போய் டீப்பில் கேட்ச் ஆனார்.  அய்யர் போனவுடன் கோலி எழுச்சி பெற்றார். கடைசி 5 ஓவர்களில் சிக்சர்களுடன் 9 முறை எல்லைக் கோட்டைத் தாண்டி அடித்தார். இதில் ஒரு ஷாட் கோலியின் அரைசதமானது 37 பந்துகளில் அவர் அரைசதம் எடுத்தார். ஆர்ச்சரை லாங் ஆஃபில் அடித்த சிக்சர் கிளாஸ் ரகம்.16வது ஓவரில் 13 ரன்களும், 17வது ஓவரில் 14 ரன்களும் வந்தன. பிறகு மார்க் உட்டின் பவுலிங்கையும் விட்டு வைக்காமல் அடுத்தடுத்து சிக்சர்கள், ஒரு நான்கு என்று 18வது ஓவரில் 17 ரன்கள் குவித்தார்.
பிற்கு ஹர்திக் பாண்டியாவின் 2 சிக்சர்களுடன் சேர்த்து கடைசி 2 ஓவர்களில் இருவரும் 25 ரன்களைச் சேர்க்க இந்தியா 156/6 என்று மரியாதைக்குரிய ஸ்கோரை எட்டியது. 17 ரன்களை மட்டுமே எடுத்த பாண்டியா கடைசியாக ஆட்டமிழந்தார், ஆனால் கோலி ஆதிக்கம் செலுத்திய இந்தக் கூட்டணி 70 ரன்கள் சேர்த்தது.

பட்லரின் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி:

இலக்கை விரட்டிய போது 2.3 ஓவர்களில் 8 ரன்களைத்தான் அடித்திருந்தனர். பிறகு புவனேஷ்வர் குமாரை ஜேசன் ராய் 2 பவுண்டரிகள் விளாசினார். ஆனால் 9 ரன்களில் ஜேசன் ராய், சாஹல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று பாயிண்டில் ரோகித்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பட்லர் அதற்குள் சாஹலை 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி ‘நானிருக்க பயமெதற்கு’ என்று இங்கிலாந்துக்கு நம்பிக்கை ஊட்டினார்.

பட்லர் தொடர்ந்து தாக்குதல் ஆட்டமான பவர் ப்ளேயில் இங்கிலாந்து 57/1 என்று அபாரத் தொடக்கம் கண்டது.  டேவிட் மலானுடன் பட்லர் 58 ரன்கள் கூட்டணி அமைத்தார், மலான் 18 ரன்களில் சுந்தர் பந்தில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். மலான் பாண்டியாவை ஒரு டாப் எட்ஜ் சிக்ஸ் மட்டுமே அடித்தார்.

17 பந்துகளில் 43 என்று பட்லர் ஏறக்குறைய தனியாகவே இங்கிலாந்து இலக்கை நோக்கி நகர்ந்தார்.  9.4 ஓவர்களில் 81/2 என்ற நிலையிலிருந்து பட்லரும், பேர்ஸ்டோவும் திரும்பிப் பார்க்கவில்லை, இருவரும் சேர்ந்து 77 ரன்கள் கூட்டணி அமைத்தனர். பேர்ஸ்டோ 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், பட்லர் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 83 நாட் அவுட். இதனால் ஆட்ட நாயகனும் பட்லர்தான்.  இங்கிலாந்து 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.
Published by:Muthukumar
First published: