Home /News /sports /

குறைந்த இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்கள்: கிரிக்கெட்டின் ராஜாவான விராட் கோலி!

குறைந்த இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்கள்: கிரிக்கெட்டின் ராஜாவான விராட் கோலி!

விராட் கோலி (AFP)

விராட் கோலி (AFP)

2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி சர்வதேச ஒரு நாள் அரங்கில் அறிமுகமானார் விராட் கோலி. ஆரம்ப காலத்தில் பல்வேறு தடுமாற்றங்களைச் சந்தித்த இவரது கிரிக்கெட் பயணம், 2010-ம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்றம் காணத் தொடங்கியது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குறைந்த இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை குவித்தவர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர் தொடங்கும்போது 10 ஆயிரம் ரன்கள் என்ற வரலாற்றுச் சாதனையை படைக்க கோலிக்கு 221 ரன்கள் தேவைப்பட்டன. முதல் போட்டியில் 140 ரன்கள் விளாசியதால், இன்றைய போட்டியில் அவர் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

    இதனை பூர்த்தி செய்யும் விதமாக தனது 205-வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார் விராட் கோலி. இதன்மூலம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைய கோலி முறியடித்துள்ளார். சச்சினுக்கு இந்த சாதனையை படைக்க 259 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன. சர்வதேச அளவில் 13 வீரர்களும், இந்தியாவில் 5 பேரும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி சர்வதேச ஒரு நாள் அரங்கில் அறிமுகமானார் விராட் கோலி. ஆரம்ப காலத்தில் பல்வேறு தடுமாற்றங்களைச் சந்தித்த இவரது கிரிக்கெட் பயணம், 2010-ம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்றம் காணத் தொடங்கியது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 சதங்கள், 2 அரை சதங்கள் என விளாசியதுடன், தன்னுடைய சராசரியையும் 35 புள்ளிகளுக்கு குறையாமல் தக்க வைத்து வருகிறார்.

    தனது முதல் 5 ஆயிரம் ரன்களைக் கடக்க இவருக்கு 6 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது 4 ஆண்டுகளில் அடுத்த 5 ஆயிரம் ரன்களை விளாசியுள்ளார் கோலி. இவர் தனது 194-வது இன்னிங்சில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்தார். தற்போது 205-வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை விளாசியுள்ளார். ஆக ஆயிரம் ரன்களை எடுக்க வெறும் 11 இன்னிங்ஸ்களே அவருக்கு தேவைப்பட்டுள்ளன.

    அத்துடன் சொந்த மண்ணில் 4 ஆயிரம் ரன்களை வேகமாகக் கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையும் கோலியால் முறியடிக்கப்பட்டுள்ளது. சச்சினுக்கு இந்த சாதனையைப் படைக்க 92 இன்னிங்ஸ்கள் ஆன நிலையில், கோலிக்கு 78 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டுள்ளன.

    இந்தப் பட்டியலில் 99 இன்னிங்ஸ்களுடன் தோனி 3-வது இடத்தில் உள்ளார். இதேபோல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையும் விராட் கோலியால் முறியடிக்கபட்டுள்ளது.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: Cricket, IndvsWI, Record, Virat Kohli

    அடுத்த செய்தி