ரஹானே கடந்த 16 டெஸ்ட் போட்டிகளில் வைத்திருக்கும் ஆவரேஜ் அல்லது சராசரி 24.39 ஆகும். அவரது மொத்த டெஸ்ட் ஆவரேஜ் 40க்கும் கீழ் இறங்கி விட்டது. உள்நாட்டில் அவரது சராசரி கடந்த 5 ஆண்டுகளில் 35லிருந்து 30 ஆகச் சரிந்துள்ளது. அவர் அணியில் தொடர வேண்டும் என்று கோலி விரும்புகிறார். ஆனால் இதே கரிசனம் அஸ்வின் மீது அவருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே.
ரஹானே இடம் பற்றி கோலி அளித்த பேட்டியில், “நான் ரஹானேவின் பார்ம் என்ன என்பது பற்றி தீர்ப்பு கூற முடியாது. யாரும் எந்த ஒருவரின் பார்ம் பற்றியும் தீர்ப்பு வழங்க முடியாது. ஒரு தனி நபருக்குத்தான் தன்னுடைய ஆட்டம் எங்கு ரிப்பேர் செய்யப்பட வேண்டும் என்பது தெரியும். ஆனால் கடந்த காலத்தில் கூறியது போல், ‘கடினமான மேட்ச் சூழ்நிலையில் தாக்கம் ஏற்படுத்தும் ஆட்டத்தை ஆடும் வீரர்களை நாம் காக்க வேண்டும். அடுத்து நமக்கு என்ன நடக்குமோ என்று ஒரு பார்ம் அவுட் ஆன வீரர் நினைக்கும்படியான அழுத்தம் தரும் சூழல் இந்த அணியில் இல்லை” என்று கூறுகிறார் கோலி.
ஆனால் அவர் செய்தது என்ன? அஸ்வினை அந்த அழுத்தத்திற்கு தள்ளியதுதான், இதற்கு முன்பாக புஜாராவை, புவனேஷ்வர் குமாரை, மணீஷ் பாண்டேவை, உமேஷ் யாதவ்வை ‘அடுத்து நமக்கு என்ன நடக்குமோ?’ என்ற மனநிலைக்குத் தள்ளியதைத்தான் செய்தார். இத்தனை வக்கணையாக ரகானேவுக்காக வாதாடும் விராட் கோலி ஏன் இங்கிலாந்தில் அஸ்வினை வேண்டுமென்றே 4 டெஸ்ட் போட்டிகளுக்கும் உட்கார வைத்தார்? கோலி சுயபரிசோதனை செய்து பார்க்கட்டும்.
கோலி மேலும் கூறுகிறார், “வெளியில்தான் ஒரு வீரரை தலையில் வைத்து கொண்டாடுவதும் 2 மாதங்களில் அதே வீரரின் தலையைக் கேட்பதும் நடக்கும், நாங்கள் இப்படி யோசிக்க மாட்டோம், எதிர்காலத்திலும் இப்படி யோசிக்கவே மாட்டோம், ஏனெனில் ஒவ்வொரு வீரரும் எத்தனை கடின உழைப்பை போடுகிறார்கள் என்பது எங்களுக்குத்தான் தெரியும். இது அஜிங்கிய ரஹானேவாகட்டும் அல்லது எந்த ஒரு வீரராகவும் இருக்கட்டும்” என்கிறார் விராட் கோலி.
ஆனால் அவர் சொல்வதில் உண்மையில்லை, எந்த ஒரு வீரருக்கும் அல்லது எல்லா வீரர்களுக்கும் அவர் இந்த பெருந்தன்மையை காட்டியதில்லை, பார்மில் இருக்கும் அஸ்வினை உட்கார வைத்து அழகு பார்த்து விட்டு பார்மில் இல்லாத ரஹானேவுக்காக இத்தனை கொம்புகளை சீவுகிறார் கோலி.
ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்தி விட்டார், “ரஹானே, புஜாரா விவகாரங்கள் குறித்து அணித்தேர்வுக்குழுவிடம் விவாதிப்போம். இது ஒரு ஆரோக்கியமான தலைவலியே. இப்போதே நாங்கள் விவாதிக்கத் தயாராகி விட்டோம், தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக தெளிவு பிறக்கும்” என்றார் விராட் கோலி.
இதையும் படிங்க: அதிசயம் ஆனால் உண்மை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படியும் நடக்குமா?
ரஹானே போல் எத்தனை வீரரை கோலி ஆதரித்திருக்கிறார், ஏன் ரஹானேவையே கூட கும்ப்ளே ஆதரித்த போது தேவையில்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவில் கழற்றி விட்டவர்தானே இந்த கோலி, ஆகவே இப்படி வெண்ணையாகப் பேசும் கோலியை நம்பி விட முடியாது, இங்கிலாந்தில் அஸ்வினை உட்கார வைத்தும், தென் ஆப்பிரிக்காவில் பிரமாதமாக வீசி 7 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 40 ரன்களையும் எடுத்த புவனேஷ்வர் குமாரை அடுத்த டெஸ்ட்டிலேயே உட்கார வைத்தவர்தானே கோலி!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, Captain Virat Kohli, India vs South Africa 2019, R Ashwin