• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 'தோற்றாலும் நாங்கள்தான் சாம்பியன்’ என்ற கோலி, ரவி சாஸ்திரியின் கர்வமான மனப்போக்கிற்கு நியூசிலாந்து கொடுத்த அடி

'தோற்றாலும் நாங்கள்தான் சாம்பியன்’ என்ற கோலி, ரவி சாஸ்திரியின் கர்வமான மனப்போக்கிற்கு நியூசிலாந்து கொடுத்த அடி

விராட் கோலி - ரவி சாஸ்திரி

விராட் கோலி - ரவி சாஸ்திரி

உண்மையில் சொல்லப்போனால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக உள்ளது, இரண்டு நல்ல டெஸ்ட் தொடக்க வீரர்களை உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து தேர்வு செய்ய வேண்டும், ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற ‘ஃபாண்டசி கிரிக்கெட்’ போன்ற வீரர்களை தூக்க வேண்டும், விராட் கோலியிடமிருந்து கேப்டன்சியை மாற்ற வேண்டும் அல்லது அவருக்கு இவ்வளவு பவர் கொடுக்கக் கூடாது. 

  • Share this:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்றும் ‘இன்னொரு போட்டி’ என்றும் தோற்றாலும் பழைய சாதனைகளை மறுக்க முடியாது என்றும் பழம்பெருமையும், தோற்றாலும் நாங்கள்தான் சாம்பியன், நம்பர் 1 என்ற மனப்போக்குடைய கர்வமும் இந்திய அணிக்கு ஒரு தேவையான, நல்ல தோல்வியை பெற்றுத் தந்துள்ளது.

முந்தைய, 4-5 ஆண்டு ஆட்டத்திறனை பேசி, வெற்றிகளைப் பேசி மேலும் வெற்றி பெற வீரர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டியதுதான் பயிற்சியாளர், மற்றும் கேப்டனின் செயலாக இருக்க முடியும், தோற்றாலும் பரவாயில்லை, நாம் தான் பெரிய அணி, நாம் தான் சாம்பியன் என்ற கர்வமான போக்கும், மனநிலையும், போட்டிக்கு முந்தைய பேச்சுக்களும் திமிருக்கும் கேன் வில்லியம்சனின் நியூசிலாந்து பெரிய அடியை வழங்கியுள்ளது. மாறாக கேன் வில்லியம்சன் வெற்றிக்குப் பிறகு இந்திய அணிக்கு சுட்டிக்காட்டியது போல் கூறியதையும் நாம் கவனிக்க வேண்டும் அதாவது, ‘நாங்கள் இறுதிப் போட்டிக்குரிய மரியாதை கொடுத்து ஆடினோம்’ என்று கூறியது உண்மையில் ரவி சாஸ்திரி, கோலியின் மனப்போக்குக்கு கொடுத்த பதில்தான்!

உண்மையில் சொல்லப்போனால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக உள்ளது, இரண்டு நல்ல டெஸ்ட் தொடக்க வீரர்களை உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து தேர்வு செய்ய வேண்டும், ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற ‘ஃபாண்டசி கிரிக்கெட்’ போன்ற வீரர்களை தூக்க வேண்டும், விராட் கோலியிடமிருந்து கேப்டன்சியை மாற்ற வேண்டும் அல்லது அவருக்கு இவ்வளவு பவர் கொடுக்கக் கூடாது.

ரோகித் சர்மா


மீண்டும் தோல்வியை மறுக்கும் விதமாக ‘ஒரு போட்டி எங்களைத் தீர்மானிக்காது’ ரகப் பேச்சுக்களை ரவிசாஸ்திரியும் விராட் கோலியும் தவிர்க்க வேண்டும்.

டாஸ் வென்று கேன் வில்லியம்சன் இந்திய அணியை பேட் செய்ய அழைத்த போதே அந்த அணியின் தீவிரம் தெரிந்தது. இந்தத் தீவிரம் நியூசிலாந்தின் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங், கேன் வில்லியம்சனின் களவியூகம் என்று வெளிப்பட்டது, மாறாக விராட் கோலி தொலைக்காட்சிக்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார், மைதானத்தில் சீன் போட்டுக் கொண்டிருந்தார், ரசிகர்களை தூண்டி விடுவது போன்ற செயல்களால் வெற்றி வந்து விடுமா? அதாவது தோல்வியடைந்தாலும் ரசிகர்களுடன் தன் நெருக்கத்தைக் காட்டிக் கொள்வதன் மூலமாக தோல்விக்குப் பிந்தைய விமர்சனங்களை விராட் கோலி முன் தவிர்க்கிறார் என்றே கூற வேண்டும்.

போட்டியை ஒளிபரப்பிய நிறுவனமும் ‘கோலி ஸ்போர்ட்ஸ்’ என்பது போல் ஒவ்வொரு விநாடியும் கோலியின் செய்கைகளை, அங்க அசைவுகளைக் காட்டிக் கொண்டு பிராண்ட் இமேஜைக் கட்டமைத்துக் கொண்டிருந்ததே தவிர இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் ஆடுவது போல் தெரியவில்லை, பிக் பாஸ் போன்ற ரியால்டி ஷோ போல்தான் இந்திய அணியின் ஆட்டம் இருந்தது. ஷமி, பும்ரா, அஸ்வின் நீங்கலாக.

விராட் கோலி


மாறாக அமைதியின் பேருருவமாக கேன் வில்லியம்சனின் நியூசிலாந்து ஆட்டத்தில் ஆக்ரோஷம் காட்டியது, திட்டங்களை நன்றாகச் செயல்படுத்தியது. கோலிக்கு ஸ்விங் கண்டிஷனில் ஆட வரவில்லை. புஜாராவுக்கும் இதே கதிதான். ரகானே இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழந்தது கவனமின்மை. ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விக்கெட்டை தூக்கி எறிந்தார். இவரை பெரிய பிஸ்தா என்று நாம் ஏற்கெனவே கொம்பு சீவி விட்டோம், இன்று கொம்பைப் பிடித்து ஆட்டி விட்டது நியூசிலாந்து.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் கைல் ஜேமிசனிடம் ஆட்டமிழந்தார் விராட் கோலி, பந்து உள்ளே வருகிறதா, வெளியே செல்கிறதா என்று தெரியாமல் பந்தை ஆடாமல் விட்டு எல்.பி. ஆனார் ரோகித் சர்மா, நாட்டில் ஏகப்பட்ட உண்மையான டெஸ்ட் தொடக்க வீரர்கள் வாய்ப்பில்லாமல் கிடக்க, மிடில் ஆர்டர் ரோகித் சர்மாவைக் கொண்டு போய் தொடக்கத்தில் களமிறக்கி துணைக்கண்ட பிட்சில் அவரது பராக்கிரமத்தை வைத்து பெரிய பிஸ்தா என்று காட்ட முயற்சித்தனர், ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கும் திறமை கொண்டவர்தானா என்ற ஐயம் எழுகிறது.

விராட் கோலி 13 அவுட். |சவுத்தாம்ப்டன்.


கேன் வில்லியம்சன் கூறியது போல் கடைசி 5 வீரர்கள் நியூசிலாந்து பேட்டிங்கில் பிரமாதமாக ஆடி 114 ரன்களைச் சேர்த்தனர். கடைசி 4 விக்கெட்டுகள் 87 ரன்களைச் சேர்த்தனர், மாறாக இந்தியா கடைசி 5 விக்கெட்டுகள் 61 ரன்களைச் சேர்த்தனர்.

பேட்டிங்கில் ஆழம் இருக்கிறது என்கிறார் விராட் கோலி, இது இந்தியப் பிட்ச்களுக்குப் பொருந்தும், ஆனால் வெளிநாட்டுப் பிட்ச்களில் பலவீனமடைந்த, திறமையற்ற டிம் பெய்ன் கேப்டன்சியில் ஆடிய அந்து நொந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை வைத்து உலகையே ஆட்கொண்டதான பேச்சுத்தான் கோலியையும் ரவிசாஸ்திரியையும் இப்போது காலி செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்மையான டெஸ்ட் தொடக்க வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், புவனேஷ்வர் குமாரை சுத்தமாக புறமொதுக்கியது மிகப்பெரிய தவறு. சிராஜை உட்கார வைத்து ஜடேஜாவை எடுத்து வேஸ்ட் செய்தது பெரிய தவறு, இதையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல் அனைத்து தவறுகளையும் மறுக்கும் போக்கு இருக்கும் வரை விராட் கோலியினால் வெளிநாட்டில் தொடரை வெல்ல முடியாது, ரகானே சாதித்தார் என்றால் அவரிடம் கேன் வில்லியம்சன் போன்ற ஒரு அமைதியும் நிதானமும் உள்ளது.

கோலியிடம் உள்ள சுயமோக நார்சிசம் ரகானேவிடம் இல்லை. இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல், தோற்றால் கவலையில்லை, தோற்றாலும் நாங்கள்தான் சாம்பியன் போன்ற மனப்போக்குகளுக்கு ரவிசாஸ்திரி குறிப்பாக விராட் கோலி முற்றுப் புள்ளி வைத்தால்தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலாவது அவமானங்களை இந்திய டெஸ்ட் அணி தவிர்க்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: