விராட் கோலி சதமெடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன, மூன்று வடிவங்களிலும் கிங் ஆக இருந்தவர் இன்று பூனையாகி விட்டார். இதோ பார்முக்கு வருகிறார், அதோ வருகிறார் என்பதெல்லாம் அவருக்கும் அவர் விளம்பரிக்கும் நிறுவனங்களுக்குமான செய்தியாக இருக்கிறதே தவிர ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை, இந்நிலையில் அவரை அடிக்கடி பாகிஸ்தானின் பாபர் அசாமுடன் ஒப்பிடுகின்றனர், ஆனால் ஆகிப் ஜாவேட் என்ற முன்னாள் ஸ்விங் பவுலர், கோலி மாதிரியெல்லாம் பாபர் அசாம் தட்டுத்தடுமாற மாட்டார் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.
பார்க்டிவி.டிவி என்ற சேனலுக்கு பேட்டியளித்த ஆகிப் ஜாவேட் கோலி போல் 993 நாட்கள் சதமெடுக்காமல் பாபர் அசாம் இருக்க மாட்டார் என்ற தொனியில் பேசியுள்ளார். ஆம் கோலி சதமெடுத்து 993 நாட்கள் ஆகிறது இன்னும் 7 நாட்கள் போனால் சதமில்லாமல் 1000 நாட்கள் என்று போஸ்டர் அடித்தாலும் அடிப்பார்கள் போலிருக்கிறது.
இது தொடர்பாக ஆகிப் ஜாவேட் கூறியது:
கிரேட் பிளேயர்கள் 2 ரகம். ஒரு ரக கிரேட் பிளேயர்கள் பார்ம் அவுட் ஆனால் அவ்வளவுதான், மீண்டு வருவதற்கு நீண்ட காலம் எடுக்கும். மற்றபடி உத்தி ரீதியாக சரியாக ஆடுபவர்கள் இரண்டாவது ரகம், இவர்களுக்கு பார்ம் இல்லாத நாட்கள் நீண்ட காலம் இருக்காது.
நீண்ட காலம் பார்ம் இல்லாமல் தவிக்கும் பட்டியலில் கேன் வில்லியம்சன், பாபர் அசாம், ஜோ ரூட் ஆகியோர் இருக்க மாட்டார்கள். இவர்களின் பலவீனங்களைக் கண்டுப்பிடிப்பது கடினம். ஆனால் விராட் கோலியின் ஆஃப் ஸ்டம்பு லைன் பந்துகளுக்கான பலவீனம் அம்பலமாகிவிட்டது. லட்சக்கணக்கான முறை கோலியை அந்த பலவீனத்தில் போட்டு ஆட்டியிருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆனால் கடந்த சில இன்னிங்ஸ்களாக நான் பார்த்தவரையில் அந்த பந்துகளை கோலி தள்ளியிருந்து ஆட முயல்வதில்லை. உத்தியை மாற்றினால் பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும். எனவே தன்னுணர்வுடன் ஆடாமல் ஒரு மாதிரி சுதந்திரமாக அவர் ஆடினால் அவர் தன் நீண்ட நாளைய பார்மின்மையிலிருந்து மீள முடியும்.
கோலி ரன் எடுக்கவில்லை எனில் இந்தியா தோற்கும். எங்கள் அணியைப் போலவே ஒரு சூழல் இது. இப்படியிருக்கையில் ஏன் தீபக் ஹூடாவை ஆடவைக்கலாமே, அவரோ நல்ல பார்மில் இருக்கிறார். ஆசியக் கோப்பை நடைபெறும் யுஏஇயில் பார்மில் இல்லாத வீரர்கள் கூட பார்மை கண்டுப்பிடித்துக் கொள்ளலாம், இங்கு பிட்ச்கள் அப்படிப்பட்டவையே.
என்றார் ஆகிப் ஜாவேத்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை டி20யில் துபாயில் ஆகஸ்ட் 28ம் தேதி மோதுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup, Babar Azam, Virat Kohli