பந்த் இடத்தை பிடித்த ராகுல் - மகாபிரபு நீங்க இங்கேயும் வந்திட்டீங்களா என ரசிகர்கள் கிண்டல்
பந்த் இடத்தை பிடித்த ராகுல் - மகாபிரபு நீங்க இங்கேயும் வந்திட்டீங்களா என ரசிகர்கள் கிண்டல்
கே.எல்.ராகுல் - ரிஷப் பந்த்
ரிஷப் பந்த் இடத்தை பிடித்துள்ள ராகுல், ஹர்திக் பாண்டியாவின் மகளை வைத்திருந்ததன் மூலம் பன்டின் பேபிசிட்டர் இடத்தையும் பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த்க்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ராகுல் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றதையடுத்து, வீரர்கள் அனைவரும் ஜாலியாக நேரத்தை செலவிட்டனர். பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அனைவரும், ஹர்திக் பாண்டியா குடும்பத்தினருடன் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றனர்.
அங்கு ஹர்திக் பாண்டியாவின் மகள் அகஸ்தியாவுடன் நேரத்தை செலவிட்ட அவர்கள், ஒன்றாக அமர்ந்து உணவருந்தியுள்ளனர். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாவின் மகளை வைத்திருப்பது நெட்டிசன்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்தது. அணியில் இடம் பிடிப்பதில் போட்டிப்போடும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்கள், பேபி சிட்டர் இடத்தை பிடிக்கவும் போட்டிபோடுவதாக, கே.எல் ராகுலை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
The pack that stays together. Bubble or no bubble. Results will come and go for others to follow. Great day in lovely Pune 🙏🏻🇮🇳 #TeamIndiapic.twitter.com/ErKLBgn9N9
முன்னாள் இந்திய அணி வீரரான வாசிம் ஜாபரும், இந்திய அணியில் பந்த்தின் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், பேபி சிட்டர் இடத்தையும் கே.எல்.ராகுல் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைப் பலரும் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். பேபி சிட்டர் என்ற வார்த்தை இந்திய அணி, ஆஸ்திரேலிய டூரில் இருக்கும்போது மிகவும் பிரபலமானது. போட்டி ஒன்றில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.
ஸ்டம்புக்கு பின்னால் இருந்த டிம் பெய்ன், ரிஷப் பந்த இந்திய அணியில் இனி வரும் காலங்களில் இடம் கிடைக்காது என்றும், அவர் ஆஸ்திரேலியாவில் தங்கி ஓய்வெடுக்கலாம் என்றும் வார்த்தை சீண்டலில் ஈடுபட்டார். மேலும், தன் குழந்தைகளை பேபிசிட்டராக வந்து கவனித்துக் கொண்டால், மனைவியுடன் திரைப்படங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என டிம்பெய்ன் ரிஷப் பந்த்தை வம்புக்கு இழுத்தார். அப்போது இந்த விஷயம் சர்ச்சையான நிலையில், பிறகு டிம்பெய்னின் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் ரிஷப் பந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது முதல் ரிஷப் பந்த்தை விமர்சனத்துக்காக பேபிசிட்டர் என சிலர் சீண்டிவந்த நிலையில், தற்போது கே.எல்.ராகுல் பேபி சிட்டராக மாறியிருப்பதை விளையாட்டாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அணியில் இடம்பிடிப்பதில் போட்டி இருந்தாலும், வெளியில் வீரர்கள் அனைவரும் குடும்பமாக இருப்பது மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இணையவாசிகள் பலர் கூறியுள்ளனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.