டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நாக்பூர் டெஸ்டில் அவரை அணியில் சேர்த்தது கடும் விமர்சனத்தை கிளப்பிய நிலையில், டெல்லி டெஸ்டிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, முதல் இன்னிங்ஸில் அவர் ரன் குவிக்க தவறினார். இதனால் அணியின் தேர்வுக்குழு மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் மீது கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்திய அணியின் ரன் குவிக்கும் மெஷினாக இருந்தவர் கே.எல். ராகுல். இவர் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஃபார்மை இழந்து தள்ளாடி வருகிறார். தொடர்ந்து சொற்ப ரன்னில் வெளியேறியதால் இவருக்கு டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பறிபோனது.
ஒருநாள் போட்டிகளிலும் கே.எல்.ராகுலுக்கு போட்டியாக சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் 71 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ராகுல் 41 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இந்நிலையில் அணியில் கே.எல். ராகுலின் தேர்வு குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- கே.எல்.ராகுலின் மோசமான ஆட்டம் தொடர்கிறது. கடந்த 20 ஆண்டுகால இந்திய கிரிக்கெட்டில் இவ்வளவு குறைவான டெஸ்ட் சராசரியைக் கொண்ட ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
And the torrid run continues. More to do with rigidity of the management to persist with a player who just hasn’t looked the part. No top order batsman in atleast last 20 years of Indian cricket has played these many tests with such a low average. His inclusion is …. https://t.co/WLe720nYNJ
— Venkatesh Prasad (@venkateshprasad) February 18, 2023
இன்னொரு பக்கம் நல்ல ஆட்டக்காரர்களின் திறமை வீணடிக்கப்படுகிறது. ஷிகர் தவானின் டெஸ்ட் சராசரி 40+, மயங்க் அகர்வால் இரட்டை சதத்துடன் 41+ சராசரியை வைத்துள்ளார். சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சர்ப்ராஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார். கே.எல்.ராகுலை அணியில் சேர்த்தது நீதியின் மீதுள்ள நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் ராகுலின் சராசரி ரன் 27-க்கும் குறைவாக உள்ளது. என்னைப் பொருத்தளவில் சிறந்த 10 ஓபனிங் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் இடம்பெற மாட்டார். குல்தீப் யாதவ் ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்று அடுத்த போட்டியில் விளையாடாமல் பெஞ்ச்சில் உட்கார வைக்கப்படுகிறார். போட்டிக்கு ஏற்ப குதிரைகள் மாற்றப்படுகின்றன. ஆனால் எந்தப் போட்டிக்கும் ஏற்ற குதிரை கே.எல். ராகுல் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket