• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி பொலார்ட் சாதனை; தனஞ்ஜயா ஹாட்ரிக் சாதனை வீண்: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி பொலார்ட் சாதனை; தனஞ்ஜயா ஹாட்ரிக் சாதனை வீண்: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

இலங்கை ஸ்பின்னர் தனஞ்ஜெயாவின் ஒரே ஓவரில் 6 சிச்கர்களை விளாசி கிரன் பொலார்ட் யுவராஜ் சிங் சாதனையைச் சமன் செய்தார், அதே போல் உலகக்கோப்பை 2007-ல் ஹெர்ஷல் கிப்ஸ் 6 சிக்சர்களை விளாசியதும் குறிப்பிடத்தக்கது.

  • Share this:
கூலிட்ஜில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரன் பொலார்ட் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடிக்க இலங்கை அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சஸ்பென்ஸ் திரில்லர் படம் போல் இந்த ஆட்டம் திடீர்த் திருப்பங்களுடன் அமைந்தது, முதலில் 3 ஓவர்களில் சிம்மன்ஸ், லூயிஸ் அதிரடியில் 48 ரன்கள் பிறகு ஒரே ஓவரில் ஹாட்ரிக் கைப்பற்றினார் தனஞ்ஜயா கெய்லையும் டக்கில் எடுத்தார். பிறகு பொலார்ட், ஃபேபியன் ஆலன் அடுத்தடுத்த பந்துகளில் அவுட், கடைசியில் ஜேசன் ஹோல்டர் விளாச வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மே.இ.தீவுகள் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் 13.1 ஓவர்களில் 134/6 என்று வெற்றி பெற்றது.

இலக்கை விரட்டிய போது இலங்கை பவுலர் தனஞ்ஜயாவின் 4வது ஓவரில் எவின் லூயிஸ் (28), கிறிஸ் கெயில் (0), நிகோலஸ் பூரன் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இன்னொரு தொடக்க வீரர் லெண்டில் சிம்மன்ஸ் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் விளாசி இன்னொரு டிசில்வாவிடம் ஆட்டமிழக்க மே.இ.தீவுகள் 5 ஓவர்களில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இன்னிங்சின் 6வது ஓவரில் 6 சிக்சர்கள்: வெளுத்து வாங்கிய பொலார்ட், சிக்கிய தனஞ்ஜயா:

முந்தைய ஓவரில்தான் ஹாட்ரிக் கைப்பற்றியிருந்தார் அகிலா தனஞ்ஜயா, தனக்கு இப்படி அடுத்த ஓவரில் சாத்துப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

6வது ஓவரை தனஞ்ஜயா வீச வந்தார். முதல் பந்தை மண்டிபோட்டு லாங் ஆன் மேல் ஒரே தூக்குத் தூக்கினார் 6. 2வது பந்தும் ஃபுல் லெந்த் பந்து நேராக சைட் ஸ்க்ரீனை போய் அடித்தது பந்து. அடுத்த பந்தை கொஞ்சம் ஆஃப் சைடு வைடாக வீசினார் ஆனால் பொலார்ட் இதை லாங் ஆஃப் மேல் தூக்கினார் ஹாட்ரிக் சிக்சர்கள். அடுத்த பந்து மிட்விக்கெட்டின் மீது சிக்ஸ். இது போய்க்கொண்டே இருந்தது. 5வது பந்தை பின் காலில் சென்று ஒரே தூக்குத் தூக்கினார் பவுலர் தலைக்குமேல் இன்னொரு சிக்ஸ். 5 சிக்சர்கள் ஆகிவிட்டது.



தனஞ்ஜெயாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ரவுண்ட் த விக்கெட் வந்தார், லெக் திசையில் வந்த பந்தை மிட்விக்கெட் மேல் மீண்டும் ஒரு சிக்ஸ். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள், தலையை குனிந்து ரசிகர்கள் பாராட்டை ஏற்றுக் கொண்டார்.

பவர் ப்ளே முடிவில் 98 ரன்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் நல்ல நிலைமைக்கு வந்த போது டிசில்வா ஓவரில் பொலார்ட் 11 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்து கூக்ளி பந்தில் எல்.பி.ஆனார். ரிவியூ விரயம் ஆனது. அடுத்த பந்தே பேபியன் ஆலன் ஆட்டமிழக்க ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார். ஆனால் டிவைன் பிராவோ தடுத்தாடி விட்டார்.

பிறகு ஜேசன் ஹோல்டர் 24 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 29 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார் மே.இ.தீவுகள் வென்றது.

முன்னதாக இலங்கை அணியில் டிக்வெல்லா 33 ரன்களையும் பதும் நிஷாங்கா 39 ரன்களையும் எடுக்க 20 ஓவர்களில் 131 ரன்களை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகனாக கிரன் பொலார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: