கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறும் பாகிஸ்தான் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர் கேன் வில்லியம்சன், நிகோல்ஸ், மற்றும் மிட்செல்.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து 362 ரன்கள் பின் தங்கி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலையில் உள்ளது.
கேன் வில்லியம்சன் 364 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் 238 ரன்கள் விளாசி ஃபாஹிம் அஷ்ரப் பந்தில் ஆட்டமிழந்தார். இது இவரது 24வது டெஸ்ட் சதமாகும். வில்லியம்சனின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 251 ரன்களாகும். இது இவரது 4வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும்.
ராஸ் டெய்லர் ஆட்டமிழக்கும் போது 71/3 என்று இருந்த நியூஸிலாந்து அணியை கேன் வில்லியம்சன் (238), ஹென்றி நிகோல்ஸ் (157 ) 440 ரன்களுக்கு உயர்த்தினர். இருவரும் இணைந்து 369 ரன்களை 70 ஓவர்களில் குவித்தனர்.
நிகோல்ஸ் 291 பந்துகளில் 18 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 157 ரன்கள் குவித்து முதலில் வெளியேறினார். இதோடு விட்டாரா கேன் வில்லியம்சன் பாக். பந்து வீச்சை? டேரில் மிட்செலுடன் இணைந்து 133 ரன்களை சேர்த்தார், மிட்செல் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 112 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். கைல் ஜேமிசன் அவர் பங்குக்கு 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 30 ரன்களை விளாசினார்.
238 ரன்களில் ஆட்டமிழந்த கேன் வில்லியம்சன் தான் ஆட்டமிழந்தவுடன் டிக்ளேர் செய்தார். பாகிஸ்தான் பவுலர்கள் தரப்பில் ஷாஹின் அப்ரீடி, நசீம் ஷா, பாஹிம் அஷ்ரப், ஸபர் கோஹார் ஆகியோர் பந்து வீச்சில் சதமெடுத்தனர்.
பாகிஸ்தான் பீல்டிங் படுமோசம் கேட்ச்கள் பல தரைத் தட்டின.
177 ரன்களில் வில்லியம்சன் இருந்த போது அசார் அலி கல்லியில் கேட்சை விட்டார், நொந்து நூலான பவுலர் ஷாஹின் அஃப்ரீடி. ஏற்கெனவே மொகமது அப்பாஸ் பந்து வீச்சில் ஏற்கெனவே இன்னொரு சத நாயகனான நிகோல்ஸுக்கு காலமேயே ஒரு கேட்சை விட்டனர்.
ரிஸ்வானின் கேப்டன்சி படு சொதப்பல் களவியூகத்தை தள்ளித் தள்ளி வைத்து வில்லியம்சனுக்கு ரன் குவிக்க களம் அமைத்துக் கொடுத்தார். ஒரு ஸ்லிப், 6 பீல்டர்கள் எல்லைக்கோட்டருகே என்று களம் அமைத்ததால் வில்லியம்சனுக்கு சுலபமாகப் போய் விட்டது.
இப்போது பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டி வரும். வில்லியம்சன் 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார். தற்போது பாகிஸ்தான் தன் 2வது இன்னிங்ஸில் ஷான் மசூத் விக்கெட்டை கைல் ஜேமிசனிடம் இழந்தது. இன்று இன்னமும் 3 ஓவர்களே மீதமுள்ளன.