மைதானத்தில் விராட் கோலியும், டிம் பெய்னும் மோதுவதை மிகவும் விரும்புகிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (26.12.18) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய தொடரில் அந்நாட்டு வீரர்கள் ஆக்ரோசமாக செயல்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை, ஆஸ்திரேலிய வீரர்களை மிஞ்சும் அளவிற்கு இந்திய வீரர்கள் பயங்கர ஆக்ரோசமாக இருக்கின்றனர். பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்னும் கடுமையாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

களத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - டிம் பெய்ன். (Twitter)
மைதானத்தில் விராட் கோலி நடந்துகொண்ட விதம் குறித்து பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், தரக்குறைவாக எதுவும் பேசவில்லை என விராட் கோலியும், போட்டி மனப்பான்மையோடு மோதிக் கொண்டோம் என டிம் பெய்னும் கூறியிருந்தனர். இவர்களின் மோதலை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேட்டி அளித்துள்ளார்.
“மைதானத்தில் விராட் கோலியும், டிம் பெய்னும் மோதுவதை மிகவும் விரும்பி பார்த்தேன். ஆஸ்திரேலிய அணிக்கே உரிய நகைச்சுவையை பார்த்தேன். அதை மோதல், சண்டை என உங்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளலாம். அது கோபமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் நாமாக இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது. டிம் பெய்னில் செயல்பாடு என்னை கவர்ந்தது” என அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். (Cricket Australia)
ஏற்கனவே, இரு நாட்டு வீரர்களும் களத்தில் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளும் நிலையில், மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.