இந்தியாவுக்கு எதிராக 3 சதங்கள் விளாசி இந்தியப் பந்துவீச்சை போராடி எதிர்த்து நின்ற இங்கிலாந்து கேப்டன் அஞ்சா நெஞ்சன் ஜோ ரூட்டுக்கு ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான ஐசிசி விருது கிடைத்துள்ளது.
இவருடன் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் போட்டியில் இருந்தார். இருவரையும் பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் முதல் இடத்தை பிடித்துள்ளார். பெண்களுக்கான கிரிக்கெட்டில் அயர்லாந்து ஆல்-ரவுண்டர் எய்மியர் ரிச்சார்ட்சன் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜோ ரூட் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்களுடன் 507 ரன்கள் விளாசினார். அத்துடன் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தொடர் ஆரம்பிக்கும் முன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5ம் இடத்தில் இருந்த ஜோ ரூட், கோலி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற ஆகச்சிறந்த வீரர்களைக் கடந்து சென்று முதலிடம் பிடித்தார்.
வலுவான இந்திய அணியின் பவுலிங்குக்கு எதிராக ஹாட்ரிக் சதங்களை ரூட் எடுத்தது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர், மகளிர் வீராங்கனைக்கான தேர்வை நடத்துகிறது, ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐசிசி வாக்களிக்கும் குழுவில் உள்ள முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி.டுமினி ஜோ ரூட்டின் சாதனையை விதந்தோதிப் பேசினார்.
“கேப்டனாக எதிர்பார்ப்பும் பொறுப்பும் ரூட் தோள்களில் இருந்தது. ஆனால் அப்படியும் அவர் அணியை தன் பேட்டிங் மூலம் முன்னின்று வழிநடத்தியது அபாரமானது. இதன் மூலம் பல பெரிய வீரர்களைக் கடந்து ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்துக்கு தாவினார்” என்றார் ஜேபி டுமினி.
இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜோ ரூட் 9,278 ரன்களை 49.88 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 23 சதங்கள், இதில் 5 முறை இரட்டைச் சதம் 50 அரைசதங்களை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னராகத் திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 6,109 ரன்களையும் டி20 சர்வதேசப் போட்டியில் 893 ரன்களையும் எடுத்து கிட்டத்தட்ட 16,00 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார் ஜோ ரூட். அவருக்கு இந்தப் பரிசு தகுதியானதே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England, ICC, ICC Ranking, Joe Root