வெற்றி தோல்வியை டாஸ் தீர்மானிக்கவில்லை: குழிபிட்ச் விவாதத்தில் பம்முகிறார் ஜோ ரூட்

ஜோ ரூட்

ஏன் முதல் டெஸ்ட்டில் டாஸில் தோற்றாலும் இந்தியா டெஸ்ட்டை வெல்ல வேண்டியதுதானே? திறமை என்னவாயிற்று? இருவருக்கும் அதுவும் ஒரே பிட்ச் தானே? இருவரும் 11 வீரர்களுடன் தானே ஆடினர். அது ஏன் 36 ஆல் அவுட்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியப் பிட்ச்களில் ரஹானேவினால் வெல்ல முடிகிறது, குழிப்பிட்சைத் தவிர கோலியினால் வெல்ல முடியவில்லை?

 • Share this:
  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சென்னையில் நடைபெற்ற போது முதல் 2 நாள் தார்ச்சாலைப் பிட்சில் ரூட் டாஸ் வென்றார், இரட்டைச்சதம் விளாசினார், இங்கிலாந்து 578 ரன்கள் விளாசியது இதனையடுத்து இந்தியா முதல் டெஸ்ட் போட்டியை 227 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது.

  உடனே ரவிசாஸ்திரி சிவந்த கண்களுடன் கடுக்கும் கன்னக் கதுப்புகளுடனும் பழிவாங்கும் தமிழ் சினிமா கதாநாயகர்கள் போல் ஆகிவிட்டார். கோலி, பிட்ச் சரியில்லை என்று மைல்டாகச் சொல்லி விட்டு 2வது டெஸ்ட் போட்டிக்கு எனக்கு முதல் நாளே பந்து குழியில் விழுந்து பேட்ஸ்மென் மட்டையில் தானாகவே பட்டு கேட்ச் ஆக வேண்டும்.. என்ன சரியா? என்று பிட்ச் நிர்வாகியிடம் கேட்காததுதான் குறை மற்றபடி அந்த வகை பிட்ச் தான் கிடைத்தது இங்கிலாந்து 317 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

  அதாவது வெற்றி தோல்வியை திறமையை விட டாஸ்தான் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்து திறமையான அணியெனில் 2வது டெஸ்ட் போட்டியில் வென்றிருக்கலாமே என்று வாதிடும் ஒருதலைபட்ச ரசிகர்களுக்கு ஒரு கேள்வி: ஏன் முதல் டெஸ்ட்டில் டாஸில் தோற்றாலும் இந்தியா டெஸ்ட்டை வெல்ல வேண்டியதுதானே? திறமை என்னவாயிற்று? இருவருக்கும் அதுவும் ஒரே பிட்ச் தானே? இருவரும் 11 வீரர்களுடன் தானே ஆடினர். அது ஏன் 36 ஆல் அவுட்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியப் பிட்ச்களில் ரஹானேவினால் வெல்ல முடிகிறது, குழிப்பிட்சைத் தவிர கோலியினால் வெல்ல முடியவில்லை?

  நல்ல பவுலிங் பிட்ச் என்பது வேகப்பந்து வீச்சு சாதக பிட்ச் ஆக மட்டுமே இருக்க வேண்டியதில்லை, என்பதும் குழிப்பிட்ச் ஸ்பின் பிட்ச் இல்லை என்பதும் இந்தியா 5,000 ரன்கள் அடிக்க வேண்டும் எதிரணி 5 ஆல் அவுட் ஆகவேண்டும் என்ற ரசிக மனோபாவங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இந்த விவாதங்களை மைதானங்களுக்கு வெளியே விட்டு தங்கள் கருத்துகளை அடக்கி வாசிப்பதுதான் அழகு. அதைவிடுத்து அஸ்வினும், ரோஹித் சர்மாவும் பிட்சை நியாயப்படுத்தி பேசுவதெல்லாம் ரொம்பவும் லோக்கலாக இருக்கிறது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்.

  இந்நிலையில் உள்நாட்டுச் சாதகம் என்பது எல்லா அணிகளுக்கும் உள்ளதுதானே என்று ரோஹித் சர்மா கூற, கடந்த டெஸ்ட் சென்னை பிட்ச் குறித்து கடும் விமர்சனங்கள் இருந்தாலும் பணபலமும் அதிகார பலமும் இருக்கும் பிசிசிஐ-யை யாரேனும் பகைக்க முடியுமா? ஜோ ரூட்டும் பாவம் இன்னும் ஐபிஎல் வேறு ஆடவில்லையே? அதனால் அவரும் இந்த வகைப் பிட்ச்களில் ஒன்றும் தவறில்லை என்று பம்மியுள்ளார்.

  ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்காக அவர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது:

  அனைவரும் உள்நாட்டுச் சாதகமான சூழ்நிலைகளுக்குத் தகுதி ஆனவர்களே. உலகில் எங்கு சென்று ஆடினாலும் கடினம்தான். ஆனால் எனக்கு அது பிடித்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகே இதுதான், பலதரப்பட்ட பிட்ச்களிலும் ஆட வேண்டும். அனைத்து நிலைமைகளையும் சமாளிக்கும் அணி வேண்டும்.

  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றில் டெஸ்ட் போட்டிகள் பல வித்தியாசங்களைக் கொண்டது. இந்த பன்முகத்தன்மைதான் கிரிக்கெட்டின் கவர்ச்சியே. பலதரப்பட்ட சவால்களைச் சந்திப்பதில்தானே திறமை உள்ளது. வெற்றி பெற வேண்டுமெனில் ஏகப்பட்ட திறமைகள் வேண்டும்.

  ஆனால் 2வது டெஸ்ட் பிட்ச் மோசமானது என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் வெற்றி பெற தகுதியானவர்களாக நாங்களும் இல்லை. டாஸ் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கவில்லை. நம்பர் 1 டெஸ்ட் அணியாக வேண்டுமெனில் நாங்கள் இதையும் சிறப்பாக கையாளத்தான் வேண்டும்.

  இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.
  Published by:Muthukumar
  First published: