இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி போட்டியில் இந்திய அணி இன்று விளையாடியது. ஆஸ்திரேலியா ஏ அணி உடனான பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டாகினர். மயங்க் அகர்வால் (2), ஹனுமன் விஹாரி (15), ராஹனே (4), ப்ர்த்தீவ் ஷா (40), ரிஷப் பந்த (5), விருதமான் சஹா (0) என இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சிக்கினர்.
இந்திய அணி 129 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்களை இழந்தது. கடைசி விக்கெட்டிற்கு பும்ரா மற்றும் முகமது சிராஜ் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி கௌரவமான ரன்னை எடுக்க வைத்தனர். அதிலும் பும்ரா 57 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர்கள் விளாசி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். பும்ராவின் பந்துவீச்சை பார்த்து பலமுறை வியந்துள்ளோம், ஆனால் முதல் முறையாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்திய அணி இறுதியாக முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியினரை இந்திய வேகப்பந்து வீச்சு திணறவிட்டது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர்.ஆஸ்திரேலிய அணி 108 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் முகமது ஷமி மற்றும் நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்களையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 86 ரன்கள் பின்தங்கி உள்ளது.