ஜோ ரூட் வெற்றி பெற்ற பிறகு தன் நாட்டுப் பிட்சை கடுமையாக விமர்சித்தார்; விராட் கோலி செய்வாரா?

ரூட் - கோலி

ஆகவே ஒரு விஷயம் புரிகிறது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிட்சைப் பொறுத்தவரை கேப்டன்களின் தலையீடு இருக்க முடியாது என்பதுதான், ஆனால் இங்கு அதற்கு நேர்மாறு.

  • Share this:
சென்னை, அகமதாபாத் டெஸ்ட் பிட்ச்கள் குறித்து கடும் சர்ச்சைகள் கிளம்ப, இந்திய வீரர்கள் வெளிநாடு சென்று தோற்றால் பிட்சை பற்றி குறைகூறவில்லையே என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

உதாரணமாக அடிலெய்ட் டெஸ்ட்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது ஏன் பிட்சை குறை கூறவில்லை என்று மட்டித்தனமான கேள்விகள் எழுகின்றன. பிங்க் நிறப்பந்து கூடுதல் ஸ்விங் இந்திய பேட்ஸ்மென்கள் ஆடாமல் விட வேண்டிய பந்தையெல்லாம் மட்டையை நீட்டி மரபான பலவீனங்களில் ஆட்டமிழந்தனர், மேலும் ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆடத்தெரியாமல் உடலில் அடி வாங்கினர், இதில் பிட்சின் பங்கு எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

அதே போல் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்ற போது வேகப்பந்து வீச்சுக்குச் சாதக ஆட்டக்களம் என்று சொல்லியே போட்டனர், இரு அணிகளுமே 350 ரன்களை ஒரு இன்னிங்ஸில் கூட எட்ட முடியவில்லை. ஆனால் உள்நாட்டு அணி என்பதால் வெல்லும் வழி அவர்களுக்குத் தெரிந்தது, அப்போது விராட் கோலி பிட்சைக் குறை கூறவில்லையே என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. பிட்சை குறை கூற முடியாது ஏனெனில் வெளியே செல்லும் பந்துக்கு மட்டையை நீட்டி நீட்டி அவுட் ஆனார்கள், ரோஹித் சர்மாவை டேல் ஸ்டெய்ன் கடும் கிண்டலடித்தார்.

விராட் கோலி, எப்படி பிலாண்டரிடம் ஆட்டமிழந்தார், 3-4 பந்துகள் அவுட் ஸ்விங்கர் போட்டி விட்டு ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தால் வாரிக்கொண்டு பிளிக் ஆடப்போய் எல்.பி. ஆகி ஆட்டமிழந்ததைப் பார்த்தோம் இதில் பிட்ச் எங்கு வருகிறது?நியூஸிலாந்துக்குச் சென்று 7 அடி உயர கைல் ஜேமிசனை ஆட முடியாமல் 2-0 என்று தோற்று விட்டு வந்தோம், அப்போதும் இதே கதைதான், உத்தியில் ஏகப்பட்ட தவறுகள். இங்கு குழிப்பிட்ச், இடுப்புக்கு மேல் பந்துகள் எழும்பாத பிட்சில் ஆடி ஆடி அங்கு போய் ஆட முடியவில்லை, இதில் பிட்ச் எந்தச் சமன்பாட்டில் வரும், அதனால்தான் கோலி பிட்சைக் குறைகூறவில்லையே தவிர அது ஏதோ அவரது பெருந்தன்மை அல்ல.

இப்போது என்ன கேள்வி எனில், ஜோ ரூட் இங்கிலாந்தில் போடப்பட்ட பிட்சையே குறைகூறி மோசமான பிட்ச் என்று வர்ணித்தார், அது போல் கேப்டன் விராட் கோலி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு போடப்பட்ட பிட்சில் தோற்றதால் பிட்சைக் குறை கூறினார், ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பிட்சைப் பற்றி வாயைத் திறக்கவில்லை. காரணம் முதல் பந்திலிருந்தே காட்டுத்தனமாகத் திரும்ப வேண்டும் என்று பிட்சைக் கேட்டதே விராட் கோலிதான்.

ஆகவே ஒரு விஷயம் புரிகிறது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிட்சைப் பொறுத்தவரை கேப்டன்களின் தலையீடு இருக்க முடியாது என்பதுதான், ஆனால் இங்கு அதற்கு நேர்மாறு.

இந்நிலையில் லார்ட்ஸில் 2019-ல் அயர்லாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 85 ஆல் அவுட் ஆனது. ஆனால் அயர்லாந்து அணியை 4வது இன்னிங்ஸில் 38 ரன்களுக்குச் சுருட்டி இங்கிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அது லார்ட்ஸ். இங்கிலாந்து பிட்ச், ஆனால் ஜோ ரூட் என்ன சொன்னார் தெரியுமா?

“நிச்சயம் இது நியாயமான பிட்ச் அல்ல; மட்டைக்கும் பந்துக்குமான நியாயமான சவால் தரும் போட்டி அல்ல இது. ஒட்டுமொத்த ஆட்டமுமே இப்படி போய்விட்டது. நான் இதைக் கூற விரும்பவில்லை என்றாலும் லார்ட்ஸ் பிட்ச் தரங்கெட்டதாக இருந்தது அது டெஸ்ட் பிட்ச் இல்லை. நாங்கள் கடினமாக ஆடி ரன்களை எடுத்தோம்.

இது என்ன நியாயமான போட்டியா? இரு அணிகளுக்கும் ஒரே பிட்ச்தானே என்று கேட்கலாம், ஆனால் எப்படியாவது வெற்றி பெற வழியைத் தேட வேண்டும். இது போன்ற பிட்ச்களை இனி போடக்கூடாது என்றுதான் கூறுவேன்” என்றார்.

ஆகவே தன் சொந்த பிட்சையே கடும் விமர்சனம் செய்தார் ஜோ ரூட், எனவே விராட் கோலி வெளிநாட்டில் சென்று பிட்சைப் பற்றி குறைகூறாததற்கு வேறு காரணங்கள் இருக்க அதைப் பெருந்தன்மை என்றும் இங்கு நியாயமாக இல்லாத பிட்சை விமர்சிக்காமல் அகமதாபாத் பிட்ச் ‘பேட்டிங் பிட்ச்’ என்றும் விராட் கோலி கூறுவதை எதில் சேர்ப்பது? என்ற கேள்வி எழுகிறது.

ஆஸ்திரேலியா சென்று பிரமாதமாக ஆடி 0-1 என்று பின் தங்கிய நிலையிலிருந்து பிரமாதமாக ரகானே தலைமையில் எந்த ஒரு சர்ச்சையும், அமர்க்களமுமின்றி அமைதியாக வரலாறு படைத்து விட்டு வந்தோம். ஆனால் இங்கு மட்டமான பிட்சைப் போட்டு வென்றுவிட்டு சத்தம் ஓவராகப் போடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
Published by:Muthukumar
First published: