Home /News /sports /

கோலி, பாண்டே, ஜடேஜாவுக்கு கேப்டனாக இருந்த வீரர் 30 வயதில் ஓய்வு பெற்ற பரிதாபம்

கோலி, பாண்டே, ஜடேஜாவுக்கு கேப்டனாக இருந்த வீரர் 30 வயதில் ஓய்வு பெற்ற பரிதாபம்

தன்மய் ஸ்ரீவஸ்தவா

தன்மய் ஸ்ரீவஸ்தவா

ஆடாமலேயே பெரும் கனவுகளைச் சுமந்த இந்த உள்ளங்கள் இளம் வயதில் ஓய்வு பெறுவது வேதனையளிப்பதாக உள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமீபத்தில் ஈஷ்வர் பாண்டே என்ற உயரமான சிஎஸ்கே மற்றும் ம.பி. மத்திய மண்டல வீரர் வருத்தத்துடன் தன் 33வது வயதில் ஓய்வு பெற்றார். தோனி மட்டும் எனக்கு இந்திய அணியில் வாய்ப்புக் கொடுத்திருந்தால் நான் இந்தியாவுக்காக ஆடியிருப்பேன் என்று வேதனையுடன் அவர் விடைபெற்றார். ஆனால் 2020-ல் தன் 30-வது வயதில் தன்மய் ஸ்ரீவஸ்தவா என்ற உத்தரப்பிரதேச இடது கை பேட்டர் ஓய்வு பெற்றது இதை விட பெரிய சோகக்கதை.

தன்மய் ஸ்ரீவஸ்தவா என்ற இந்த இடது கை பேட்டர் யுவராஜ் சிங் போல வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர். இவர் ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காகவும் இந்தியா ப்ளூ அணியிலும் கொச்சி டஸ்கர்ஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தவர். இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு ஆடியுள்ளார்.

16வயதில் இவரது கிரிக்கெட் கரியர் அதிரடியாகத் தொடங்கியது. 16வயதிலேயே இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு கேப்டனாக இருந்தார், இவரது கேப்டன்சியின் கீழ் விராட் கோலி, மணீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆடியுள்ளனர். தன் 18வது வயதில் கோலியிடம் கேப்டன்சியை இழந்தார்.  ஆனால் மலேசியாவில் 2008-ல் நடந்த யு-19 உலகக்கோப்பையை இந்தியா வென்ற போது தன்மய் ஸ்ரீவஸ்தவா தொடரில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 2006-08-ல் அடுத்தடுத்து உத்தரப் பிரதேச ரஞ்சி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த போது அந்த அணிக்கு பெரிய பங்களிப்பு செய்தவர் தன்மய் ஸ்ரீவஸ்தவா.

இவர் தன் 17வது வயதில் 2006-ல் சேலஞ்சர் டிராபியில் சச்சின் டெண்டுல்கருடன் ஓப்பனிங் இறங்கியவர். இதைப்பற்றி இவரே ஒருமுறை கூறிய போது, “சச்சின் டெண்டுல்கருடன் ஓப்பனிங் இறங்கியதுதான் என்னுடைய மறக்க முடியாத கிரிக்கெட் தருணம். சச்சின் என் ஹீரோ, எனவே இது ஒரு மாயாஜாலத் தருணம். ரஞ்சி பைனலில் சதமெடுத்தது, யு-19 உலகக்கோப்பை வெற்றியில் பங்களிப்பு செய்தது, இந்தியா ஜெர்சியை அணிந்தது ஐபிஎல் தொடரில் ஆடியது நான் கொண்டாடும் தருணங்களாகும்” என்று கூறினார்.

ALSO READ | அர்ஷ்தீப் சிங் ஒரு சாதாரண பவுலர்தான் - முன்னாள் பாகிஸ்தான் பவுலர் சீண்டல்...

முதல் தர கிரிக்கெட்டில் 34 என்ற சராசரியுடன் முடித்தார் தன்மய் ஸ்ரீவஸ்தவா. ஒவ்வொரு ரஞ்சி சீசனிலும் 500-600 ரன்களை எடுத்தவர். இவர் வட இந்தியாவில் பெரும்பாலும் விளையாடியதால் அப்போது பிட்ச்கள் மற்ற இடங்களை விட சவாலாக இருக்கும் என்று அவர் கூறியது உண்மைதான். அதுவும் இவர் தொடக்க வீரராக இறங்கும் போது மேலும் கடினம். ஏதோ இவரது ஆரம்ப கிரிக்கெட் கரியரிலேயே இவருக்கு ஓ.என்.ஜி.சியில் வேலை கிடைத்தது. இனி இந்தியாவுக்கு தான் ஆட முடியாது என்ற நிலையில் 30-வயதிலேயே ஓய்வு பெற்றார்.

எத்தனையோ தன்மய் ஸ்ரீவஸ்தவாக்கள், அமோல் மஜூம்தார்கள், பங்கஜ் சிங்குகள், சுதாகர் ராவ்கள், காம்ப்ளிகள் மன்காட்கள், ஈஷ்வர் பாண்டேக்கள், தமிழ்நாட்டுக்கு ஆடிய திருவள்ளூரை சேர்ந்த ஜெசுராஜ்கள், சிஎஸ்கேவுக்கு ஆடிய தமிழ பழனி அமர்நாத்கள், சிஎஸ்கேவுக்கு ஆட முடியாமல் தோனியினால் வாய்ப்பளிக்கப்படாத பாபா அபராஜித்கள் போன்றோர்  விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் இவர்களை ஆடாமல், இவர்களுக்கு பந்து வீசாமல் எந்த ஒரு டாப் பவுலரும் இந்திய அணிக்குள் நுழைந்ததில்லை.

ALSO READ | பயிற்சியாளர் பொறுப்பா வேண்டவே வேண்டாம், பார்வையாளனாகவே இருக்கிறேன் - ரவி சாஸ்திரி

இனிமேலும் பிசிசிஐ, தேர்வுக்குழு ஒரு டீமை அமைத்து திறமைகளைக் கண்டுப்பிடித்து 3-4 சர்வதேசப்போட்டிகளிலாவது இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை. தேறுபவர்கள் தேறட்டும், ஆனால் இந்தியாவுக்கு ஆடாமலேயே பெரும் கனவுகளைச் சுமந்த இந்த உள்ளங்கள் இளம் வயதில் ஓய்வு பெறுவது வேதனையளிப்பதாக உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Cricket, Mahendra singh dhoni, Team India, Virat Kohli

அடுத்த செய்தி