ஐ.பி.எல் அணிகளின் செயல்பாட்டால் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் அதிருப்தி அடைந்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணிகளுக்கான பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பல பயிற்சியாளர்கள் இதில், புறக்கணிக்கப்பட்டு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக சலசலப்பு எழுந்தது.
இந்த நிலையில், இது பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவின் கருத்து தெரிவித்துள்ளார். ‘‘நாம் ஏராளமான சிறந்த பயிற்சியாளர்களை கொண்டுள்ளோம் என்று நம்புகிறேன். அவர்கள் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் துறையில், பயிற்சியாளர் துறையிலும் ஏராளமான திறமைகள் உள்ளன.
நாம் அவர்கள் வளர்வதற்கான நம்பிக்கை கொடுப்பது அவசியம். அப்படி செய்தால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஐபிஎல் தொடரில் ஏராளமானவர்களுக்கு துணைப் பயிற்சியாளர்கள் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு ஏமாற்றம் அளித்தது.
ஐபிஎல் தொடரில் நிறைய இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் சூழ்நிலைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கும். பயிற்சியாளர்களும் அதேபோல்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்திய பயிற்சியாளர்கள் மூலம் அணிகள் அதிக பயனை அடைந்திருப்பார்கள். இதனால் பயிற்சியாளர்கள் வளர வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றார்.
ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.