கொல்கத்தாவில் நடைபெற்ற 2020 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 15.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது, வழக்கம் போல் ரிச்சர்ட் மேட்லி வீரர்களுக்கான ஏலத்தை தொடங்கினார்.
இதில் பதிவு செய்யப்பட்ட 971 வீரர்களிலிருந்து 332 பேர் தேர்வு செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டனர். எட்டு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர்.
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் அடிப்படை விலை 2 கோடி ரூபாயிலிருந்து 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் இவர் தான். மேலும் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இரண்டாவது அதிகபட்ச தொகை இது என்பது கூடுதல் சிறப்பாகும். 2015ம் ஆண்டு யுவராஜ் சிங்கை டெல்லி அணி 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்ததே அதிகபட்ச தொகையாக உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், டெல்லி அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பஞ்சாப் அணி 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தென்னாப்ரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை 10 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி தட்டிச்சென்றது.
வழக்கம் போல் இந்த முறையும் மேற்கு இந்தியத் தீவு வீரர்களுக்கு அதிக மவுசு இருந்தது. வேகப்பந்துவீச்சாளர் செல்டன் காட்ரெல் 8 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்காகவும், ஷிம்ரோன் ஹெட்மயர் 7 கோடியே 75 லட்சத்திற்கு டெல்லி அணிக்காவும் ஏலம் எடுக்கப்பட்டனர். நாதன் கோல்டர் நைல் 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். ஆரோன் ஃபிஞ்ச்சை 4 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி தட்டிப் பறித்தது.
இந்திய வீரர்களை பொருத்தவரை கொல்கத்தா அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட உத்தப்பாவை 3 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை நான்கு கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி தேர்வு செய்துள்ளது. ஜெய்தேவ் உணட்கட்டை 3 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி எடுத்துக் கொண்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரணை 5 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லாவை 6 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேஷில்வுட்டை அடிப்படை விலை 2 கோடி ரூபாய்க்கும் இரண்டாவது சுற்று ஏலத்தில் தமிழக வீரர் சாய் கிஷோரை அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்துக்கொண்டது.
19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் விளையாடும் வீரர்களுக்கு ஏலத்தில் ஜாக்பாட் அடித்துள்ளது. கேப்டன் பிரியன் கார்க்-கை, 1 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இதேப்போல் மற்றொரு வீரர் ஜெய்ஸ்வால் 2 கோடி 40 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, யூசப் பதான், சாய் ஹோப், கப்டில், பிராத்வெய்ட் மற்றும் வங்கதேச, இலங்கை வீரர்களையும் ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.