பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் மும்பை 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. கடைசி ஓவரில் அதிரடி மன்னன் டேவிட் மில்லர் கிரீசில் இருந்தும் டேனியல் சாம்ஸ் 8 ரன்களை எடுக்க விடாமல் டாட் பால்களை வீசி மும்பையை வெற்றி பெறச் செய்தார், இதில் சாய் சுதர்ஷன் ஹிட் விக்கெட் ஆனது ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஹிட் விக்கெட்டுகள் பலவிதம், தொப்பியோ, ஹெல்மெட்டோ பந்து லைவ் ஆக இருக்கும் போது கழன்று ஸ்டம்பில் விழுந்து ஹிட் விக்கெட் ஆகலாம், அல்லது பேக்ஃபுட்டில் ஆடுகிறேன் பேர்வழி என்று பின்னால் சென்று ஸ்டம்பை மிதித்து ஹிட் விக்கெட் ஆகலாம், மட்டையை பின்னால் கொண்டு சென்று கட், லேட் கட் ஆடும்போது சில சயமங்களில் பந்துக்கு பதிலாக ஸ்டம்பை கட் செய்து ஹிட் விக்கெட் ஆகலாம். புல், ஹுக் ஆடும்போது பேலன்ஸ் தவறி பேட்டர்கள் ஸ்டம்ப் மேலேயே விழுந்து ஹிட் விக்கெட் ஆகலாம் இப்படி ஒருமுறை சேப்பாக்கில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கோவன்ஸிடம் மொஹீந்தர் அமர்நாத் ஆனார், பந்து சிக்ஸ். ஆனால் இவரோ அவுட். இப்படியாக ஹிட்விக்கெட்டுகள் பலரகம். இதில் சாய் சுதர்ஷன் அவுட் ஆனது ஒரு விதம்.
குஜராத் டைட்டன்ஸ் இலக்கை விரட்டும் போது 16வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. குஜராத் அணி வெற்றிக்கு 25 பந்துகளில் 40 ரன்கள் தேவை. சாய் சுதர்ஷன் இடது கை வீரர், நன்றாகவே ஆடிக்கொண்டிருந்தார். வெற்றி எளிதாகவே இருந்தது, அப்போது பொலார்ட் ஓடி வந்து ஒரு பந்தை குத்தி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சாய் சுதர்ஷன் தோள்பட்டைக்கு மேல் எழுப்பினார். சுதர்ஷன் அதை புல் ஷாட் ஆட முயன்றார் அப்படியே பிரதட்சணமாக ஒரு சுற்று சுற்றினார் ஸ்ட்ரோக்கை முடிப்பது போல் பேட்டை ஸ்டம்பில் கொண்டு போய் முடித்தார், ஸ்டம்ப் விளக்கு பிரகாசம் அடைய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் முகத்திலும் பிரகாசம், காரணம் சாய் சுதர்ஷன் ஹிட் விக்கெட்.
சாய் சுதர்ஷன் ஹிட் விக்கெட் வீடியோ:
— Diving Slip (@SlipDiving) May 6, 2022
தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சாஹா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்து உறுதியான அடித்தளத்தை அமைத்தனர், ஆனால் பிறகு துல்லியப் பந்துவீச்சு மற்றும் களத்தில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 51 வது போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் என்பது திவேத்தியா ரன் அவுட்டினால் கடைசி 2 பந்தில் 6 என்று ஆனது, ஆனால் கடைசி 2 பந்தையுமே மில்லரால் டச் செய்ய முடியவில்லை மும்பை 5 ரன்களில் வென்றது, ஆட்ட நாயகன் டிம் டேவிட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat Titans, IPL 2022