IPL 2021 Auction : இன்று களைகட்டவுள்ள ஐ.பி.எல் ஏலம்? முக்கிய வீரர்கள் யார் யார்?

ஐ.பி.எல் ஏலம் 2021

நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் சென்னையில் களைகட்டவுள்ளது. ஏலத்தில் பங்கேற்றுள்ள முக்கிய வீரர்கள் யார் யார்? எட்டு  அணிகளுக்கும் கையிருப்பு எவ்வளவு உள்ளது? வீரர்களில் யாருக்கு அதிக போட்டி? அனைத்தையும் விரிவாக காணலாம்.

  • Share this:
இந்தியாவில் நடைபெறக்கூடிய உட்சபட்ச கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். போட்டிகள் நடப்பாண்டு  ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளன. 14 வது முறையாக கொண்டாடப்படவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கக் கூடிய வீரர்களின் ஏலம் சென்னையில் இன்று களைகட்டவுள்ளது.

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளதால் இந்த ஆண்டு ஏலம் மினி ஏலமாகவே நடத்த பிசிசிஐ - ஐ.பி.எல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. அதன்படி நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள  8 அணிகளும், தங்கள் அணியில் உள்ள தேவையற்ற வீரர்களை வெளியேற்றி தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் 20தேதி வெளியிட்டது.  அதன்படி 8 அணிகளும் சேர்ந்து 139 வீரர்களை தக்கவைத்துள்ளன, 57 வீரர்களை கழட்டிவிட்டுள்ளனர்.

இந்த கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக தேவையான வீரர்களை தேர்வு செய்வதற்காக எட்டு அணிகளும் ஏலத்தில் பங்கேற்க தயார்நிலையில் உள்ளனர். இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இருந்து 1,114 வீரர்கள் ஏலத்திற்கு பதிவு செய்தனர். இதிலிருந்து 292 வீரர்களை ஐ.பி.எல். நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், 3 இணை நாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

வீரர்களின் திறமைக்கு ஏற்றார் போல் அதிகபட்சமாக  2 கோடி, முதல் குறைந்த பட்சம் 20 லட்சம் வரை அடிப்படை ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாய் ஏலத்தொகையில் இந்திய வீரர்களான கேதர் ஜாதவ் மற்றும் ஹர்பஜன் சிங் இடம்பெற்றுள்ளனர். ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், ஜேஷன் ராய், சாம் பிள்ளிங், மொயின் அலி, மார்க் உட், பிளன்கட், சஹிப் அல் ஹசன் ஆகிய எட்டு வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 1.5 கோடி ரூபாய் வரிசையில் 12 வீரர்களும், 1 கோடி ரூபாய் ஏலத்தொகையில் 11 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். சச்சின் மகன் அர்ஜூன் குறைந்தபட்ச தொகையான 20 லட்சம் ரூபாய் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 25 வீரர்கள் வரை இடம் பெறலாம் என்பதால் எட்டு அணிகளிலும் சேர்த்து 62 இடங்கள் காலியாகவுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியில்  அதிகபட்சம் 13 வீரர்கள் தேவைப்படுகின்றன.  சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு குறைந்த பட்சமாக 3 வீரர்கள் தேவைப்படுகின்றன. சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், மோனு சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். டிரேட் முறையில் ராபின் உத்தப்பா ராஜஸ்தான் அணியிலிருந்து சி.எஸ்.கே அணிக்கு மாற்றப்பட்டார்.



இதனால் சி.எஸ்.கே அணிக்கு 22.9 கோடி கைவசம் உள்ளது. மேலும் வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக 7 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுக்க காத்திருக்கின்றனர். பஞ்சாப் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் என இவர்களில் ஒருவரை  ஏலத்தில் எடுக்க போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித் தவிர இங்கிலாந்து ஹிட்டர் டேவிட் மாலனும் சி.எஸ்.கே எடுக்க காத்திருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.53.20 கோடி ரூபாய் கையிருப்பு வைத்துள்ளது. 4 உள்நாட்டு வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள் தேவைப்படுவதால் ஏலத்தில் பரீத்தி ஜிந்தா கை ஓங்கியிருக்கும்.பெங்களூர் அணியிடம் 35.90 கோடியும், 9 உள்நாட்டு வீரர்களையும், 4 வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் காலியாக உள்ளது. ராஜஸ்தான் அணியிடம் 34.85 கோடியும்,5 உள்நாட்டு வீரர்களையும் 3 வெளிநாட்டுவீரர்களும் எடுக்க காத்திருக்கின்றனர்.



மும்பை இன்டியன்ஸ் அணியிடம் 15.35 கோடி கையிருப்பு உள்ளது, 3 உள்நாட்டு வீரர்களையும், 4 வெளிநாட்டு வீரர்களையும் ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.

ALSO READ :  கொரோனோவை வென்ற சென்னை டெஸ்ட்

டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் 12.90 கோடி இருக்கிறது, 4 உள்நாட்டு வீரர்களையும், 2 வெளிநாட்டு வீர்ரகளை தேர்வு செய்ய காத்திருக்கின்றனர். கொல்கத்தா அணியிடம் 10.75 கோடி  இருப்பு வைத்துள்ளது,6 உள்நாட்டு வீரர்களையும், 2 வெளிநாட்டு வீரர்களை  எடுக்கவுள்ளனர். சன்ரைசர்ஸ் அணியிடம் குறைந்தபட்ச தொகையாக10.75 கோடி கையிருப்பு வைத்துள்ளது. குறைந்த வீரர்களே தேவை என்பதாலும் இந்த ஏலத்தில் ஹைதராபாத் அணி சைலண்டாவே இருக்கும். இருப்பினும் 2 உள்நாட்டு வீரர்களையும் ஒரு வெளிநாட்டு வீரரையும் தேர்வு செய்யவுள்ளனர்.

கொரோனோ காலத்தில் நடக்ககூடிய ஏலம் என்பதால் ஏலத்தில் பங்கேற்கும் அனைத்து அணி உரிமையாளர்கள், வீரர்கள் என அனைவரும் இரண்டு முறை கொரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நெகட்டிவ் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வருட ஐ.பி.எல். வரலாற்றில்  சென்னையில் முதல் முறையாக ஐ.பி.எல். ஏலம் களைகட்ட காத்திருக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published: