டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் அவுட்டானது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. கே.எல். ராகுல் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் போல்டானார். இந்த பந்து நோபால் எனவும் அம்பயர் இதனை சரியாக கவனிக்காமல் அவுட் கொடுத்துவிட்டதாக நெட்டிசன்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தது ஷாகின் அப்ரிடி தான். முதல் ஓவரிலே ஹிட் மேன் ரோகித் ஷர்மாவின் விக்கெட்டை எடுத்துக்கொடுத்து இந்திய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அவரது அடுத்த ஓவரின் முதல் பந்திலே கே.எல். ராகுல் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதன்காரணமாக இந்திய அணி 2.1 ஓவர்களுக்கு 6 ரன்களுக்கு 2விக்கெட்டை இழந்து தடுமாறியது. இந்நிலையில் தான் கே.எல்.ராகுல் அவுட்டான விதம் சர்ச்சையாகியுள்ளது.
ஷாகின் அப்ரிடி பந்துவீசும் போது அவரது கால் கிரீஸ்-க்கு வெளியில் இருந்தது. பந்தை அவர் ரிலீஸ் செய்யும் போது கால் கிரீஸ்-க்கு வெளியில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். அந்த புகைப்படத்தில் விராட் கோலி பேட் கீரிஸ் ஆகியவை தெளிவாக தெரிகிறது. அம்பயர் இதனை சரியாக கவனிக்காமல் அவுட் கொடுத்துவிட்டதாக இந்திய ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைத்தளத்தில் வெளிட்டு வருகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது அம்பயர் தூங்கிவிட்டார் எனக் கூறி நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பதிவிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஷம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.