களத்தில் ஆக்ரோஷத்தை குறைத்து மற்ற வீரர்களுக்கு கேப்டன் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டாமா? என்ற கேள்விக்கு விராட் கோலி பதிலளிக்கையில் கோபம் அடைந்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 242 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 73.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அடங்கியது. முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பினர். இதனால், இந்திய அணி 46 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

விராட் கோலி
இதையடுத்து, பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இழந்தது.
ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியிருந்தது.
ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகளும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
குறிப்பாக நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது, வில்லியம்சனின் விக்கெட்டை வெகுவாக கொண்டாடி தீர்த்தார் விராட் கோலி. பும்ராவின் பந்தில் வில்லியம்சன் அவுட் ஆக, விராட் கோலி ஆக்ரோஷமாக கூச்சலிட்டு கொண்டாடினார்.
நியூசிலாந்து தொடர் முழுவதும் மென்மையாகவே இருந்த விராட் கோலி, வில்லியம்சன் விக்கெட் இழப்பை ஆக்ரோஷமாக கொண்டாடியது ரசிகர்களுக்கே ஆச்சரியமாக அமைந்தது.
மேலும், தொடர் அழுத்தம் காரணமாக விக்கெட் விழுந்ததை இப்படி அவர் கொண்டாடியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதேபோல, டாம் லதாம் அவுட் ஆனது, விராட் கோலி பார்வையாளர்களை நோக்கி ஆக்ரோஷமாக “shut up and F**k up" என கூறினார். சமீபத்திய ஆண்டுகளாக அவர் இவ்வளவு ஆக்ரோஷப்பட்டதில்லை என்று சில கிரிக்கெட் விமர்சகர்களே தெரிவித்தனர்.
கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியே அவரை ஆக்ரோஷப்படுத்துகிறது என்றும் அவர்கள் கூறினர்.
எனினும், இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் தோல்வியியேயே முடிவடைந்தது.
இந்த நிலையில், போட்டிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் விராட் கோலி நிதானம் இழந்தார். நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விகளும், விராட் கோலி சொன்ன பதில்களும் பின்வருமாறு;-
நிருபர்: விராட், களத்தில் நீங்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றி சொல்ல விரும்புவது என்ன? வில்லியம்சன் அவுட் ஆன போது நீங்கள் நடந்துகொண்டது?. இந்திய கேப்டனாக களத்தில் நீங்கள் சிறந்த உதாரணமாக இருக்கவேண்டும் என நீங்கள் ஏன் நினைப்பதில்லை?
கோலி: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
நிருபர்: நான் கேள்வி கேட்டுள்ளேன்
கோலி: நான் உங்களிடம் பதில் கேட்கிறேன்
நிருபர்: நீங்கள் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும்
கோலி: கேள்விகளை கேட்பதற்கு முன்னர், களத்தில் சரியாக என்ன நடந்தது என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். பாதி கேள்விகளுடன் நீங்கள் இங்கே வரக்கூடாது. மேலும், நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்றால் இது சரியான இடமில்லை. அது பற்றி, போட்டி நடுவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. நன்றி
இந்த கேள்வி - பதில்களால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இதேபோல, கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதும், செய்தியாளர் சந்திப்பில், பிரிட்டன் செய்தியாளர் - கோலி இடையே சூடான கேள்வி பதில்கள் பறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.