ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நேற்று பாகிஸ்தானை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக 10-ம் தேதி நியூசிலாந்தை இந்தியா வென்றது. இந்தப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
பாகிஸ்தானுடனான நேற்றைய போட்டியின்போது ஹர்மன்ப்ரீத் கவுரின் மனிதநேய செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. பொதுவாக ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் வீரர்கள் சிறுவர், சிறுமிகளுடன் சேர்ந்து தங்களது நாட்டு தேசிய கீதம் இசைத்து முடிக்கப்படும்வரை உடன் நிற்பது வழக்கம்.
நேற்று போட்டி தொடங்கும் முன்னர் இந்திய அணி வீரர்களும், பாகிஸ்தான் அணி வீரர்களும் மைதானத்தில் சிறுவர், சிறுமிகளுடன் குழுமியிருந்தனர். இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஹர்மன்ப்ரீத் கவுர் தன் முன் நின்றிருந்த சிறுமி பலவீனமாக இருப்பதை கவனித்துள்ளார்.
தொடர்ந்து கவுர் அந்தச் சிறுமி கீழே விழாமல் தாங்கிப் பிடித்து நின்றார். பிறகு தேசிய கீதம் முடிந்த அடுத்த நொடியில் கவுர் அச்சிறுமியைத் தூக்கிக்கொண்டு ஓடி அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹர்மன்ப்ரீத் கவுரின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
— Mushfiqur Fan (@NaaginDance) November 11, 2018
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.