மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி பங்கேற்கும் 1000-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
வெஸ்ட் இண்டிஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் ப்ராண்டன் கிங் களமிறங்கினர். ஹோப் 8 ரன்களில் சிராஜ் பந்திலும், ப்ராண்டன் கிங் 13 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, களமிறங்கிய டேரென் ப்ராவோ, ஷாமார் ப்ரூக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ப்ராவோ 18 ரன்கள் ப்ரூக்ஸ் 12 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 18 ரன்கள், கேப்டன் பொல்லார்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மட்டும் நிதானமாக 51 ரன்கள் எடுத்தார்.
43.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். ரோஹித் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 51 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணி: 176 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்
மறுபுறம் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அகீல் ஹோசெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களிமிறங்கிய கோலியும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பன்ட்டும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து, ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 28 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.