ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வெங்கடேஷ் அய்யர், இஷான் கிஷன் டி20 தேர்வு, ஷிகர் தவான் ஒழிப்பு, புஜாரா டெஸ்ட் தேர்வு- சில சந்தேகங்கள்

வெங்கடேஷ் அய்யர், இஷான் கிஷன் டி20 தேர்வு, ஷிகர் தவான் ஒழிப்பு, புஜாரா டெஸ்ட் தேர்வு- சில சந்தேகங்கள்

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியும் இங்கிலாந்தில் மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டிக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் இந்திய டி20 அணியில் வெங்கடேஷ் அய்யர், இஷான் கிஷன் தேர்வு சில கேள்விகளை எழுப்புவது போல் செடேஸ்வர் புஜாராவின் டெஸ்ட் அணித்தேர்வும் கேள்விகளை எழுப்புகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியும் இங்கிலாந்தில் மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டிக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் இந்திய டி20 அணியில் வெங்கடேஷ் அய்யர், இஷான் கிஷன் தேர்வு சில கேள்விகளை எழுப்புவது போல் செடேஸ்வர் புஜாராவின் டெஸ்ட் அணித்தேர்வும் கேள்விகளை எழுப்புகின்றன.

முதலில் டி20 அணிக்கு வருவோம். வெங்கடேஷ் அய்யர் ஐபிஎல் 2022-ல் அடித்த ரன்களின் சராசரி 16.54. ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் போட்டிகளுக்கே எடுக்கலாமா வேண்டாமா என்ற 107% ஸ்ட்ரைக்ரேட். இஷான் கிஷனின் பிரச்சனை உண்மையான வேகம், பவுன்ஸ் ஸ்விங் பந்துகளை அவருக்கு ஆட வரவில்லை, நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 120.11. மும்பை இந்தியன்ஸ் லாபி தான் அவரைத் தேர்வு செய்ய நியாயம் கற்பித்துள்ளதாகத் தெரிகிறது.

ஏனெனில் பிரிதிவி ஷா வின் ஸ்ட்ரைக் ரேட் குறிப்பாக பவர் ப்ளேயில் 152.84. சஞ்சு சாம்சனின் மிடில் ஓவர் ஸ்ட்ரைக் ரேட்டே 150.அதிலும் வேகப்பந்து, ஸ்பின் இரண்டையுமே பின்னி எடுக்கிறவர். இந்த இருவருக்கு அருகில் கூட மற்ற இந்திய வீரர்கள் இல்லை என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரங்கள். ஆனால் இவர்களின் பலவீனம் சராசரி இருவருமே 30 ரன்களுக்கும் கீழ் அப்படியுமே வெங்கடேஷ் அய்யரை விட பெட்டர் தான்.

அதே போல் சர்வதேச போட்டிகளில் 3 மேட்ச்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்து பல்லிளிக்கும் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார், சரி இளைஞர் வாய்ப்பு கொடுக்கலாம் என்றாலும் இவருக்குப் பதில் ஷுப்மன் கில் அல்லது பிரிதிவி ஷா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்திருக்கலாம். ராகுல் திரிபாதிக்கு பிரமாதமான ஐபிஎல் தொடர் அமைந்தது, அவர் எந்த டவுனில் வேண்டுமானாலும் இறக்கலாம் சூரிய குமார் யாதவ் இல்லாதபட்சத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்தான், ஆனால் ஏனோ வெங்கடேஷ் அய்யரையும், இஷான் கிஷனையும் தேர்வு செய்துள்ளனர்.

ஷிகர் தவான் என்ன பாவம் செய்தார்?

வெங்கடேஷ் அய்யர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 போட்டிகளில் 24 ரன்களை மட்டுமே எடுத்தவர், 9 டி20 போட்டிகளில் 133 ரன்களை எடுத்துள்ளார் ஆனால் ஸ்ட்ரைக் ரேட் 162 இவர் பக்கம் நிற்கிறது. அதே போல் ரிஷப் பண்ட்டிற்கு ஓய்வு கொடுத்திருக்கலாம் அவர் கடைசி போட்டியில் செய்த மிகப்பெரிய தவறு அவரது தூக்கத்தைக் கெடுத்திருக்கும். அவர் இந்தத் தொடரில் சரியாக ஆடுவார் என்று எதிர்பார்ப்பது கடினம்.

ரிஷப் பண்ட்டிற்கு பதில் இளம் விக்கெட் கீப்பர் ஜிதேஷிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். பண்ட்டிற்கு ஓய்வு தேவை. ஷிகர் தவான் ஒழிக்கப்பட்டுள்ளார். அவர் ஐபிஎல் 2022 தொடரில் ஷிகர் தவான் 14 போட்டிகளில் 460 ரன்களுடன் 122 என்ற டீசண்டான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 47 பவுண்டரி 12 சிக்சர்களுடன் அதிக ஐபிஎல் ஸ்கோர்கள் பட்டியலில் 4ம் இடத்தில் இருக்கிறார், அதெப்படி கேப்டன்சியிலிருந்து நேராக அணியிலேயே தேர்வு செய்யாமல் போக முடியும்? உண்மையில் ஷிகர் தவான் பாவம்தான், இப்போதைய அணியில் தன்னலமற்ற ஒரு பேட்டர் என்றால் அது தவான் தான்.

செடெஷ்வர் புஜாரா செலெக்‌ஷன்:

செடேஸ்வர் புஜாரா அணிக்குத் தேவையில்லை என்று கழற்றி விடப்பட்டவர் இங்கிலாந்து கவுண்ட்டியில் 6, 201 நாட் அவுட், 109, 12, 203, 16, 170 நாட் அவுட் என்று வெளுத்துக் கட்டியதைக் காரணமாகக் கூறலாம். ஆனால் என்ன கண்டிஷனில் அவர் இந்த ரன்களை எடுத்தார் என்பதல்லவா கிரிக்கெட் அடிப்படைகளில் முக்கியம்?

பிளாட் பேட்டிங் பிட்ச், தரமற்ற எதிரணி பந்துவீச்சு, எந்த ஒரு தொழில்நேர்த்தியான பவுலரையாவது புஜாரா இந்த இத்தனைக் கவுண்ட்டி போட்டிகளில் எதிர்கொண்டாரா என்றால் இல்லை. பென் ஸ்டோக்ஸ் இறங்கி 61 பந்தில் 161 ரன்கள் எடுக்கிறார். 17 சிக்சர்கள் விளாசுகிறார் ஒரு 4 நாள் போட்டியில் என்றால் பவுலிங்கின் தரம் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளலாம்.

புஜாராவாவது இரட்டைச் சதம் தான் அதிகபட்சம் அடித்தார், லாரா போன்ற ஜீனியஸெல்லாம் இப்படிப்பட்ட மட்டமான பவுலிங்கிற்கு எதிராக மட்டைப் பிட்சில் 500 ரன்கள் அடித்து விடுவார். அப்படிப்பட்ட மீடியாக்கர் பவுலிங்கில் புஜாரா எடுத்த ரன்களை வைத்து டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்திருப்பது அவர் மேல் உள்ள மரியாதையினாலும் இந்திய அணிக்கு கடந்த இங்கிலாந்து தொடரில் பெயிலியர் ஆனாலும் சில பங்களிப்புகள் செய்ததற்காக இருக்கலாம் என்று தோன்றுகிறது, இந்தக் காரணத்தை ஏற்று கொள்ள முடியும். ஆனால் இங்கிலாந்து கவுண்ட்டியில் அடித்ததால் எடுத்தார்கள் என்றால் அது நிச்சயம் டெஸ்ட் மட்டத்தில் ஏமாற்றத்தையே அளிக்கும்.

இங்கிலாந்து பேட்டிங் ஏன் ஜோ ரூட்டைத் தாண்டி உருப்படியில்லாமல் இருக்கிறது என்பதற்குக் காரணமே அங்குள்ள கவுண்டி செட்-அப் தான். இப்படியிருக்கையில் அந்த கவுண்டியில் புஜாரா இத்தனை அடித்தார், அத்தனை அடித்தார் என்று தேர்வு செய்தால் நிச்சயம் டெஸ்ட் மட்டத்தில் பேக்ஃபயர் தான் ஆகும்!

இந்திய டி20 அணி: கே.எல்.ராகுல்(கேப்டன்), ரூத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பன்ட்(துணைக் கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல்(துணைக் கேப்டன்), ஷப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹஹூமா விஹாரி, சேட்டேஷ்வர் புஜாரா, ரிஷப் பன்ட், கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வீன், ஷ்ரதல் தாகுர், முகம்மது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகம்மது சிராஜ், உமேஷ் யாதவ், ப்ரசித் கிருஷ்ணா.

First published:

Tags: Cheteshwar Pujara, Indian team, Shikhar dhawan