வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
வங்கதேசத்தில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய மகளிர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தது. இலங்கை மகளிர் அணியில் ஒஷதி ரணசிங்கே மட்டுமே 13 ரன்கள் எடுத்து இரட்டை இலக்க ரன்களை கடந்த ஒரே வீரங்கனை ஆவர். தொடர்ந்து அபாரமாக பந்துவீசிய இந்திய அணி இலங்கையின் பேட்டிங்கை சரித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை மட்டுமே எடுத்தது.
Also Read: டி20 உலகக்கோப்பை : இந்திய அணி உடன் சென்ற ஒரே பெண் ஊழியர்... யார் இவர்?
இந்திய மகளிர் அணி தரப்பில் ரேணுகா சிங் 3 ஓவர்களை வீசி ஒரு ஓவரை மெய்டன் செய்து 5 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ராஜேஸ்வரி கயக்வாட் மற்றும் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 2 விக்கெட்டை இழந்து 8.3 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் ஸ்மிர்தி மந்தனா 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இதுவரை நடைபெற்ற மகளிருக்கான ஆசிய கோப்பை போட்டிகளில் 8ல் 7ஐ வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.