ஹராரேயில் நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரைசிங் ஸ்டார் ஷுப்மன் கில் தன் முதல் ஒருநாள் சதத்தை அடித்தார். அவர் 82 பந்துகளில் ஷுப்மன் கில் தன் முதல் ஒருநாள் சதத்தை எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இவரது முதல் சதமும் இதுதான். இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் இவான்ஸ் 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் சாய்த்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது, ஆனால் ஷிகர் தவான், ராகுல் இருவருமே சரளமாக ஆடவில்லை, தடவினர். தவான் 68 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களுடனும் கே.எல்.ராகுல் 46 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்களையும் எடுத்து வெளியேறினர். கே.எல்.ராகுல் மட்டையின் உள்விளிம்பில் பட்டு இவான்ஸ் பந்தில் பவுல்டு ஆக, ஷிகர் தவான் மட்டையை பந்து வருவதற்குள் மடக்க லீடிங் எட்ஜ் ஆக கேட்ச் ஆகி வெளியேறினார். 21 ஓவர்களில் 84/2.
இந்த நிலையிலிருந்து ஷுப்மன் கில், இஷான் இஷன் (50) சேர்ந்து ஸ்கோரை விரைவு கதியில் 42.1 ஓவர்களில் 224 ரன்களுக்குக் கொண்டு சென்றனர் அதாவது 140 ரன்களை 22 ஓவர்களில் சேர்த்தனர் இஷான் கிஷன் 61 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். முன்யோங்கா நேராக ரன்னர் முனையில் ஸ்டம்பைப் பெயர்க்க இஷான் கிஷன் வெளியேறினார்.
51 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட ஷுப்மன் கில், அடுத்த 31 பந்துகளில் தன் முதல் சர்வதேச சதத்தை எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளை மட்டுமே அடித்திருந்தார், சதம் எடுத்த பிறகுதான் இவான்ஸின் பவுன்சரை ஃபைன் லெக் மேல் ஒரு அபார சிக்ஸரை அடித்தார்.தீபக் ஹூடா 1 ரன்னில் இவான்ஸ் பந்தில் பவுல்டு ஆகி ஏமாற்றமளித்தார்.
சஞ்சு சாம்சன் 2 அருமையான கண்கொள்ளாக்காட்சியான நேர் சிக்சர்களை அடித்து 15 ரன்களில் டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் ஆகி ஜாங்வியிடம் விக்கெட்டைக் கொடுத்தார். அக்சர் படேல் 1 ரன்னில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த ஃபுல் பந்தை தூக்கி லாங் ஆஃபில் அடிக்க அங்கு சிகந்தர் ரசா அருமையாக கேட்சைப் பிடித்தார்.
ஷுப்மன் கில் கடைசி ஓவரில் லாங் ஆஃபில் கேட்ச் ஆகி வெளியேறினார், அருமையான இன்னிங்ஸ், பார்க்க கொள்ளை அழகான இன்னிங்ஸ் அவர் 97 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் 130 ரனக்ள் எடுத்து அவுட் ஆனார். மிகப்பிரமாதமான இன்னிங்ஸ், இவர் விக்கெட்டையும் இவான்ஸ் வீழ்த்தினார். ஷர்துல் தாக்கூர் ஒரு மரண ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் பவுண்டரி அடித்து அடுத்த இவான்ஸின் அருமையான ஸ்லோ பந்தில் கொடியேற்றி அவுட் ஆனார். இவான்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவர் வேற லெவல் பவுலர் என்று தெரிகிறது. எப்படியோ இந்திய அணியை 300 ரன்களை எட்ட விடாமல் செய்து விட்டது ஜிம்பாப்வே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian cricket team, Shubman Gill, Zimbabwe