ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வென்று மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது. துவக்க இணை மற்றும் கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றிக்கனியை கடைசி ஓவரில் இந்தியா பறித்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரை வென்ற இந்தியா, முதல் ஒரு நாள் போட்டியில் தோற்றது. இரண்டாவது போட்டியை இந்தியா வென்ற நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி போட்டி கட்டாக்கில் நடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட லீவிஸ் மற்றும் ஹோப் ஜோடி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீவிஸ் 21 ரன்களுக்கும், ஹோப் 42 ரன்களுக்கும் நடையைக் கட்டினர். பின்னர் சேஸ் 38 ரன்களுக்கும், ஹெட்மயர் 37 ரன்களுக்கும் பெவிலியன் திருப்பினார்.
களத்தில் இருந்த நிகோலஸ் பூரனும் அடுத்து வந்த கேப்டன் பொல்லார்டும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
பூரன் 89 ரன்னில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்சி கொடுத்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பொல்லார்ட் அவுட் ஆகாமல் 74 ரன்களைக் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை எடுத்தது.
இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் ஷர்மாவும், கே.எல். ராகுலும் சிறப்பாக ஆடினர். ரோகித் 63 ரன்களும், கே. எல். ராகுல் 77 ரன்கள் குவித்தனர். ராகுல் அவுட்டான பிறகு வந்த ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்கத்தை கடக்காமல் பெவிலியன் திரும்பினார்
மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கோலியுடன் ஜடேஜாவும் நிதானமாக ஆடினார். 85 ரன்கள் எடுத்திருந்த கோலி அதிர்ச்சி அளிக்கும் விதமாக 46-வது ஓவரில் போல்ட் ஆனார். 26 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய அறிமுக வீரர் ஷர்துல் தாகூர் 6 பந்துகளில் 17 ரன்களை விளாசி வெற்றியை நெருங்க உதவினார்.
இரு பந்துகள் எஞ்சியிருந்தபோது ஒரு ரன் தேவைப்பட்டது. அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டதால் 49.4 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்ட நாயகனாக விராட் கோலியும் தொடர் நாயகனாக ரோகித் ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.