வர்ணனைக்கு வந்து விடுவர் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவி சாஸ்திரியின் மறுபிரவேசம் குறைந்தது ஐபிஎல் 2022 வரை காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்திய தலைமை பயிற்சியாளராக இருந்த சாஸ்திரியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான வர்ணனைக் குழுவில் ரவி சாஸ்திரி இடம்பெறவில்லை.
மேலும் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்த பிறகு அவர் பொதுவெளியில் பேசி வருவது பிசிசிஐ-க்கு ஒவ்வாதது. ரவி சாஸ்திரியும் தத்துப் பித்தென்று பிதற்றி வருகிறார். மேலும் அங்கு பதவியில் உள்ள கங்குலி, ஜெய் ஷா உள்ளிட்டோருக்கு ரவி சாஸ்திரியின் சமீபத்திய கருத்துக்கள் மீது கடும் கண்டனங்கள் இருக்கவே செய்யும். குறிப்பாக கோலி வெற்றி கேப்டனாவது சிலருக்கு பிடிக்கவில்லை என்று வாரியத்தில் பதவியிருக்கும் கங்குலியைத்தான் அவர் சூசகமாக குறிப்பிட்டார் என்று சிலபல ஊடகங்கள் போட்டு உடைத்ததும் காரணமாக இருக்கலாம்.
ஒரு அறிக்கையின்படி, அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா விளையாடும் ஆறு போட்டிகளுக்கு ஏழு வர்ணனையாளர்கள் பிசிசிஐயால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சுனில் கவாஸ்கர், அஜித் அகர்கர், இயன் பிஷப், எல் சிவராமகிருஷ்ணன், ஹர்ஷா போக்லே, முரளி கார்த்திக் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிப்ரவரி 6 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை நடத்துகிறது. ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெறும் அதே வேளையில் கொல்கத்தா டி20 ஐ நடத்தும்.
பிரபல வர்ணனையாளரான ரவி சாஸ்த்ரி, 2007 ஆம் ஆண்டு ஐசிசி உலக டி20 இறுதிப் போட்டிகள் மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை உட்பட பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வெற்றிகளின் போது வர்ணணையாளராக இருந்தார்.
2017 இல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முழுநேரப் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் வர்ணனையை கைவிட வேண்டியிருந்தது, ஆனால் கடந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு உடனடியாக திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சாஸ்திரி ஏற்கனவே தீவிரமாக இயங்கி வருவதால் சில காலம் வர்ணனைகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றே முடிவெடுத்துள்ளார். "குறைந்தபட்சம் ஐபிஎல் வரை, உடனடியாக வர்ணனைகளை எடுக்க வேண்டாம் என்று அவர் ஒரு முடிவை எடுத்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவர் பிஸியாக இருப்பார். அதன் பிறகு அவர் அதைப் பற்றி யோசிப்பார்" என்று சாஸ்திரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தன.
தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் ஆணையராக சாஸ்திரி மஸ்கட்டில் (ஓமன்) உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs west indies, Ravi Shastri