இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு மொகாலியில் தொடங்குகிறது. இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும். 145 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 70 வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
அந்த வரிசையில் 71-வது வீரராக கோலி இணைகிறார். இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 12-வது வீரர் ஆவார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரசிகர்களுக்கு இந்த போட்டியைக் காண முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பின் வேண்டுகோளை ஏற்று ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக எந்த போட்டியிலும் கோலி சதம் அடிக்காத நிலையில், தனது 100-வது டெஸ்டில் சதம் விளாசி அந்த குறைய போக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என நினைத்துப் பார்த்ததில்லை என்றும், இதற்குப் பின்னால் கடின உழைப்பு இருப்பதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னும் உயிர்ப்புடன் இருக்க விராட் கோலி போன்ற வீரர்கள்தான் முக்கிய காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் தலை இறந்த வீரராக மட்டுமின்றி தலைசிறந்த கேப்டனாகவும் கோலி செயல்பட்டுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.
Also Read : சிஎஸ்கே அணிக்கு பேரதிர்ச்சி..! ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் காஸ்ட்லி வீரர் தீபக் சாஹர்
100-வது டெஸ்டில் 50 ரன்கள் சராசரியுடன் களமிறங்குவது சாதாரண விசயமல்ல எனவும், கடின உழைப்பால் மட்டுமே விராட் கோலி இதனை சாத்தியமாக்கியுள்ளதாகவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.’
எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர் கோலி எனவும், இன்றைய இளைஞர்கள் பலரின் ரோல் மாடலாக இருக்க தகுதியான நபர் அவர் எனவும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.