India vs Sri Lanka| இந்திய அணியை பந்தாடி டி20 தொடரை வென்றது இலங்கை; மொத்தமே 4 பவுண்டரிகள்தான்

டி20 தொடரை வென்ற இலங்கை அணி.

இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இலங்கை அணி இந்தியாவை 81 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு இலக்கை விரட்டி 82/3 என்று அபார வெற்றி பெற்று டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

  • Share this:
இலங்கை ஸ்பின்னர் வைனிந்து ஹசரங்கா மிகப்பிரமாதமாக வீசி 9 ரன்களுக்க்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணி 81/8 என்று சரிய, இலங்கை அணி 14.3 ஓவர்களில் இந்த இலக்கை அடித்து மிகச் சவுகரியமான வெற்றியைப் பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

கடைசி 5 டி20 தொடர்களை இழந்த இலங்கை இந்தத் தொடரைக் கைப்பற்றியது.

ஹசரங்கா இந்திய பேட்ஸ்மென்களை தன் ஸ்பின் மூலம் நடனமாட வைத்தார், அகிலா தனஞ்ஜயாவும் பிரமாதமாக வீசி சிக்கனம் காட்டினார். இந்த இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் குறுக்கப்பட்ட எல்லைக் கோடு மற்றும் மட்டரகமான பிட்ச்களில் ஆடிப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து திணறினர். மைதானமும் கொஞ்சம் பெரிது.

ஸ்பின்னர்களிடம் இப்படித் திணறும் இளைய தலைமுறை வீரர்கள் வருங்கால இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது ஐயமே. முன்னால் சென்று ஆடுவதா, பின்னால் சென்று ஆடுவதா என்பதில் அவர்களுக்கு கடும் குழப்பம்.

ஷிகர் தவான், சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகினர். சஞ்சு சாம்சன் மிக மோசமாக ஆடினார், சற்றே நேராக வந்த பந்தை கால்காப்பில் வாங்குபவர் எப்படி இந்திய அணியில் ஆட முடியும்? ஷிகர் தவான் இவ்வளவு அனுபவ வீரர், சீனியர் ஆனால் சமீராவின் வெளியே செல்லும் பந்துக்கு மட்டையை கொண்டு போய் தொங்க விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார்.

பெரிய பெஞ்ச் ஸ்ட்ரெந்த் என்று கூறப்படும் இந்திய அணியில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்திருக்கிறார் என்றால் ஐபிஎல் என்ன இளம் வீரர்களுக்கு சாதித்தது? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அணியில் மொத்தமே 4 பவுண்டரிகள்தான் அடிக்கப்பட்டது என்றால் இலங்கை பந்து வீச்சு ஆதிக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே இரட்டை இலக்கம் எட்டினார்கள்.

மாறாக இலங்கை அணியிலும் இளம் வீரர்கள்தான் ஆடினர், பிரமாதமாக பீல்டிங் செய்தனர். அபாரமாக கேட்ச்களை எடுத்தனர். துஷ்மந்தா சமீரா பந்தை குத்தி எழுப்பினார். இதில்தான் ஷிகர் தவான் மட்டையைத் தொங்க விட்டு அவுட் ஆனார். படிக்கல் 9 ரன்களில் வெளியேறினார், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாடை ஹசரங்கா காலி செய்தார். நிதிஷ் ராணா (6) ஷனகாவின் பந்து வீச்சில் அவரே பிடித்த அபாரமான இடது கை டைவிங் கேட்சுக்கு வெளியேறி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் தான் வெறும் ஐபிஎல் கிராக்கி என்பதை நிரூபித்தார்.

இலக்கை இலங்கை அணி விரட்டும் போது ராகுல் சாகர் மட்டுமே பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அவிஷ்கா பெர்னாண்டோ காட் அண்ட் பவுல்டு செய்தார், பனுகாவை எல்.பி. ஆக்க, சமரவிக்ரமாவை பவுல்டு செய்தார். 4 ஓவர்களில் 15/3 என்று அசத்தினார். தனஞ்ஜயா (23), ஹசரங்கா (14, இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித் தந்தனர். ஆட்ட நாயகன் தொடர் நாயகன் இரண்டுமே ஹசரங்காதான்.
Published by:Muthukumar
First published: