டி20-யிலும் அடி! சூரியகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார் அபாரம்: இந்தியா 1-0 முன்னிலை

வெற்றி இந்திய அணி. ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார்

முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

 • Share this:
  இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, பேட்டிங்கில் சொதப்பி, பீல்டிங்கில் கேட்சை விட்டு, பவுலிங்கில் முதல் பந்தே சிக்சர் விட்டு, அவரது பாடி லாங்குவேஜே அவர் நம்பிக்கையுடன் இல்லை என்பதைக் காட்டியது.

  கொழும்புவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது இலங்கை அணி. பிட்சில் பந்துகள் மட்டைக்கு வரவில்லை. முதல் பந்திலேயே பிரிதிவி ஷா ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். சமீராவின் அவுட்ஸ்விங்கரில் வெளியேறினார் பிரிதிவி ஷா.

  ஷிகர் தவான் (46), சஞ்சு சாம்சன் (27), சூரியகுமார் யாதவ் (50) ஆகியோர் பிரமாதமாக ஆட இந்தியா 15.2 ஓவர்களில் 127/4 என்று வந்தது. கடைசியில் இஷான் கிஷன் 20 ரன்கள் எடுக்க இந்திய அணி 164/5 என்று இந்தப் பிட்சில் விரட்டுவதற்கு கடினமான ஸ்கோரை எட்டியது. இலக்கை விரட்டிய இலங்கை அணி சீரான முறையில் விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்குச் சுருண்டது.

  புவனேஷ்வர் குமார் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும் குருணால் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, செகல், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

  இலங்கை அணி முதல் 2 ஓவர்களில் 20 ரன்களை விளாசியது. குருணால் பாண்டியா வந்தவுடன் மினோத் பனுகா எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் அவிஷ்கா பெர்னாண்டோ பிரமாதமாக ஆடினார் ஸ்கோர் 5 ஓவர்களில் 44 ரன்கள் ஆனது.

  இந்திய அறிமுக வீரரான தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி 2 ரன்களையே தன் முதல் ஓவரில் கொடுத்தார். யஜுவேந்திர செகலின் அருமையான பந்தில் தனஞ்ஜய டிசில்வா ஆட்டமிழந்தார். அவிஷ்கா பெர்னாண்டோ (26), புவனேஷ்வர் பந்தை டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இலங்கை 7.1 ஓவர்களில் 50/3 என்று ஆனது.

  சரித் அசலங்கா (44) ஒருமுனையில் போராடினார். ஆஷன் பண்டாரா 19 பந்துகளில் திக்கித் திணறி 9 ரன்கள் எடுத்தார். இவரால்தான் இலங்கையின் சேசிங் உத்வேகமே போனது. இவர் ஹர்திக் பாண்டியா பந்தில் பவுல்டு ஆனார். அசலங்கா தீபக் சாகர் பந்தில் 16வது ஓவரில் வெளியேற இலங்கையின் வெற்றி நம்பிக்கை போனது. கதவுகள் அடைக்கப்பட்டன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக சூரியகுமார் யாதவ், ஷிகர் தவான் ஜோடி 8 ஓவர்களில் 62 ரன்களைச் சேர்த்தது. ஷிகர் தவான் 36 பந்துகளில் 46 எடுக்க இன்னொரு முறை பிரமாதமாக இடைவெளிகளில் பந்தை அடித்து அற்புதமாக ஆடிய சூரியகுமார் யாதவ் 34 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் ஒரு அபார சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து ஹசரங்காவின் கூக்ளியில் எல்.பி.ஆனார்.

  சூரியகுமார் யாதவ் மட்டுமே இசுரு உதனா, மற்றும் கருணரத்னே பின்கையிலிருந்து வீசிய ஸ்லோயர் பந்துகளை பிரமாதமாகக் கணித்தார். உதனாவை பவுண்டரி அடிக்க பிறகு கருண ரத்னேவை சிக்ஸ் விளாசினார். இது ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஆகும். ஹசரங்கா கடைசி ஓவரை வீசிய போது இன்சைடு அவுட் ஷாட்டில் சிக்ஸ் விளாசி அரைசதம் பூர்த்தி செய்தார். ஆனால் இதே இன்சைடு அவுட் ஷாட்டில் சூரியாவை ஹசரங்கா வீழ்த்தி பழி தீர்த்தார். சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்ததுதான் இந்திய அணியின் ஸ்கோரை 175 ரன்களுக்குச் செல்ல முடியாமல் தடுத்தது.

  ஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
  Published by:Muthukumar
  First published: